ஜூன் 12ம் தேதி இந்திய பாஸ்போர்ட்டில் நிரவ் மோடி பயணம்….அதிர்ச்சி தகவல்

டில்லி:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் ரூ.13 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டனர். நிரவ் மோடி உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. நிரவ் மோடிக்கு சொந்தமான 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. அவரது பாஸ்போர்ட்கள் முடக்கப்பட்டன.

நிரவ் மோடியிடம் 6 இந்திய பாஸ்போர்ட்டுகள் இருப்பது தெரிய வந்து உள்ளது. அவற்றில் 2 பாஸ்போர்ட்டுகள் சில காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 4 பாஸ்போர்ட்டுகள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. நிரவ் மோடியால் பயன்படுத்தப்பட்டு வரும் 2 பாஸ்போர்ட்டுகளில் ஒன்றில், அவரது முழுப்பெயர் உள்ளது. மற்றொன்றில் முழுப்பெயரின் முதல் பாதி பெயர் உள்ளது.

இந்த பாஸ்போர்ட், இங்கிலாந்து நாட்டின் 40 மாத விசாவுடன் கூடியது. இதை பயன்படுத்தித்தான் அனேகமாக அவர் பல்வேறு நாடுகளுக்கும் சென்று வருவதாக நம்பப்படுகிறது. நிரவ் மோடி இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி கடந்த 12-ம் தேதி பயணம் மேற்கொண்டது தெரியவந்துள்ளது. லண்டனில் இருந்து யூரோஸ்டார் அதிவேக ரெயில் மூலம் பிரசல்ஸ் நகருக்குச் சென்றுள்ளார். லண்டனில் இருந்து விமானம் மூலம் சென்றால் பிடிபட்டுவிடுவோம் என்று நினைத்த அவர், ரெயில் பயணத்தை தேர்ந்தெடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் பயணம் மேற்கொண்டபோது ஐரோப்பிய குடியேற்ற அதிகாரிகள் நிரவ் மோடியின் பாஸ்போர்ட் விவரங்களை பெற்றுள்ளனர். இந்த விவரங்களை இந்திய அதிகாரிகள் சரிபார்த்தபோது நிரவ் மோடியின் பயணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நிரவ் மோடியின் பாஸ்போர்ட் பிப்ரவரி 24-ம் தேதியே ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆனால் அவர் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகே அதாவது ஜூன் 11-ம் தேதி தான் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்ட தகவல் சர்வதேச போலீசின் கவனத்துக்கு மத்திய அரசு கொண்டு சென்றுள்ளது. அதுவும் ஒரே சீரான சர்வதேச வழிமுறைகள் இல்லாத காரணத்தால் அவரது பாஸ்போர்ட் ஆவணங்களை பல்வேறு நாடுகளில் சட்டப்பூர்வமாக தடை செய்ய முடியவில்லை.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் விஜய் மல்லையா போல் நிரவ்மோடியும் லண்டனுக்கு தப்பிச் சென்றதாக சிபிஐ கூறி இன்டர்போல் உதவியை நாடியது என்பது குறிப்பிடத்தக்கது.