சென்னை,
ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகன் ராவ்  ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

வரும் 20ந்தேதி  விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டுள்ளார்.

சேப்பாக்கத்தில் உள்ள கலசமகாலில் செயல்பட்டு வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதுவரை 16 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில், ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து, அவருடன் நெருக்கமாக இருந்தவர்களிடம் விசாரணை நடைபெற உள்ளது.

அதன்படி, ஜெ.வுக்கு நெருக்கமான முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், ராம மோகனராவ் இருவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். அதன்படி ஷீலா பால கிருஷ்ணன் வருகிற 20-ந்தேதி விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.

அதற்கு அடுத்த நாள் அதாவது 21-ந்தேதி ராம மோகனராவ் ஆஜராக உள்ளார்.

விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், விசாரணை ஆணையத்தில் காலம் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.