டில்லி,

சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதம் வசூலிப்பது தொடர்பாக கர்நாடக அரசு சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

இன்று விசாரணைக்கு வந்த அந்த மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

உச்சநீதி மன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் அடங்கிய அமர்வு இந்த மனு குறித்து  ஆலோசனை நடத்தி உகந்தது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்துள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி உச்சநீதிமன்றம், ஏற்கனவே கர்நாடக தனிக்கோர்ட்டு நீதிபதி அளித்த தீர்ப்பை உறுதி செய்தது.

இந்நிலையில், ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவரை வழக்கிலிருந்து விடுவித்தனர் நீதிபதிகள்.

அதே நேரத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும், சிறப்பு நீதிமன்றம் நான்காண்டு சிறை தண்டனை அளித்து பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட தலா ரூ10 கோடி அபராதத்தையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

இதன் காரணமாக ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதம் குறித்து கர்நாடக அரசு விளக்கம் கோரியது.