சென்னை,

றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை அனுசரிக்க அரசுக்க தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்து வந்த ஜெயலலிதா, உடல்நலக் குறைவு கதாரணமாக அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, 75 நாள் சிகிச்சைக்கு பிறகு கடந்த ஆண்டு டிசம்பர்.5-ம் தேதி காலமானார்.

இவர் இறந்து ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி, வரும் டிசம்பர் 5ந்தேதி அதிமுக சார்பில் முதல்வர், துணைமுதல்வர் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில், வழக்கறிஞர் குமாரவேல் சார்பாக, வழக்கறிஞர் துரைசாமி என்பவர் ஜெயலலிதாவுக்கு நினைவு தினம் அனுசரிப்பது குறித்து முறையீடு செய்திருந்தார்.

இந்த முறையீடு, நீதிபதி டி.எஸ் சிவஞானம், எம் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் கீழ் விசாரணைக்கு வந்தது.

அதில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு தேதி இன்னும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதிதான் இறந்தாரா? என்பதே சந்தேகத்துக்குக்கிடமாக உள்ளது.

ஏனென்றால் திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய இடங்களில் நடைபெற விருந்த இடைத் தேர்தல்களில் வேட்பாளர்களையும், கட்சி சின்னங்களையும் அங்கீகரித்து முதல்வர் ஜெயலலிதா இடது கை விரல் ரேகையை பதிவிட்டு இருக்கிறார்.

இதில் திருப்பரங்குன்றம் பதிவேட்டில் வைத்த அவரது ரேகை சரியாக இல்லை என்று தேர்தல் ஆணையத்தில் ஓரு முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. இறந்தவர்களின் கைரேகைதான் தெளிவாக இருக்காது என்ற குற்றச்சாட்டு ஏற்கெனவே வைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதிதான் இறந்தார் என்று கூற முடியாது சூழல் உள்ளது.

இந்த நிலையில் அவரது நினைத்தினம் அனுசரிக்கப்படுவதற்கு தடைவிதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் இது தொடர்பாக மனுதாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.