ஜெ. மரணம்: 100 பேரிடம் விசாரணையை முடித்துள்ள நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம்

சென்னை:

றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஒய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இதுவரை 100 பேரிடம்  விசாரணை நடத்தி  முடித்துள்ளதாக தெரிவித்துள்ளது

கடந்த 2016 ஆம் ஆண்டு, செப்டம்பர் 22 ம் தேதி, தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பலகட்ட சிகிச்சை அளிக்கப்பட்டப் பிறகும், டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா இறந்தார்.

இதையடுத்து தமிழக அரசு, ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, கடந்த 2017ம் ஆண்டு  செப்டம்பர் மாதம் விசாரணை ஆணையத்தை அமைத்தது.  அதைத்தொடர்ந்து நவம்பர் 22ந்தேதி முதல் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் தனது விசாரணையைத் தொடங்கி நடத்தி வருகிறது.

இதுவரை சுமார் 100 பேரிம் விசாரணை நடத்தி உள்ளதாக கூறியுள்ள ஆணையம்,  விசாரணை நடத்தப்பட்ட சாட்சிகளில் இன்னும் 26 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்று கூறி உள்ளது.

இன்றைய குறுக்கு விசாரணைக்கு அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், டிரைவர் உள்பட 15 பேர் ஆஜரானார்கள்.  அதுபோல ஆஜரான அப்பல்லோ டாக்டர்கள் புவனேஸ்வரி சங்கர், பாபு மனோகர், சாய் சதீஷ், மற்றும் நர்சுகள் அனிஷ், சாமூண்டீஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோர்களிடம் சசிகலா வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

நாளை அப்பல்லோ சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார், ரேடியா லஜிஸ்ட் டாக்டர் மீரா, தீவிர சிகிச்சை பிரிவு டாக்டர் தவபழனி ஆகியோரிடம் விசாரணை நடக்கிறது.

அதைத்தொடர்ந்து  ஜெயலலிதாவின் மருத்துவரான சிவக்குமார், வரும் 28 ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என்று மீண்டும்  சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவர் சிவக்குமார், இதோடு 5வது முறையாக நேரில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளார்.

அவரிடம், 2014 முதல் 2016 வரை யாரெல்லாம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர் என்றும், அவருக்கு என்ன மருந்துகள் கொடுக்கப்பட்டன என்பது குறித்தும் தகவல் தெரிவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியும், அதற்கு மாற்றுத் தேதி கேட்டு பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

அப்போலோ மருத்துவமனையின் ரேடியாலஜிஸ்ட் மருத்துவர் மீரா மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் தவபழனி ஆகியோரை வரும் 28 ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது ஆறுமுகசாமி தலைமையிலான் விசாரணை கமிஷன்.

சில நாட்களுக்கு முன்னர் ஜெயலலிதா பேசியதுபோல ஒரு ஆடியோ பதிவு வெளியானது. அது குறித்து அப்போலோ மருத்துவனையின் டாக்டர்.அர்ச்சனா, ‘அந்த ஆடியோ பதிவு அப்போலோ மருத்துவமனையில் தான் பதிவு செய்யப்பட்டது’ என்று விசாரணை ஆணையத்திடம் தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில் கடந்த 25 ம் தேதி ஆஜரான அதிமுக-வின் மனோஜ் பாண்டியன், ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக நிலவி வரும் மர்மத்துக்குக் காரணம் சசிகலா தான்’ என்று குற்றம் சாட்டி உள்ளார். விசாரணை பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

 

You may have missed