ஜெ. சிகிச்சை வீடியோ: தமிழக அமைச்சர்கள் கூறுவது என்ன?

சென்னை,

ஜெ. சிகிச்சை பெறுவதாக இன்று காலை டிடிவி தினகரன் வெளியிட்ட வீடியோ உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

இன்று காலை  டிடிவி தரப்பை சேர்ந்த வெற்றிவேல், ஜெ.சிகிச்சை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இந்த வீடியோ குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்துக்களை பதிவிட்டு வரும் வேளையில், தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, காமராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஜெயக்குமார் விசாரனை ஆணையம் அமைத்த பிறகு எந்த ஆதாரமாக இருந்தாலும் கமிஷனில் தான் சொல்ல வேண்டும் எனவும் சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட வெற்றிவேலுக்கு யார் அதிகாரம் கொடுத்தது  எனவும் கேள்வி எழுப்பினார்.

ஆர்.கே.நகரில் நாளை வாக்குப்பதிவு உள்ள நிலையில் வீடியோ வெளியிட்டது விதிமீறல்தான் எனவும்  தேர்தல் விதியை மீறிய டிடிவி தினகரன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்  தெரிவித்தார்.

ஜெவின் புகழை சீர்குலைக்கவே சசிகலா தரப்பு செய்த சதியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் எங்களை ஜெயலலிதாவை பார்க்கவிடாமல் சசிகலாவின் கட்டுப்பாட்டிலேயே வைத்தி ருந்தனர் எனவும் குறிப்பிட்டார்.

ஜெ.சிகிச்சை குறித்து 14 வீடியோக்கள் இருப்பதாக கூறிய நிலையில் ஒரு வீடியோவை மட்டும் வெளியிட்டது ஏன் எனவும் வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் வெளியிட வில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

அதிமுக தொண்டர்கள் வேதனைப்படும் வகையில் தினகரன் ஆதரவாளர்கள் செயல்படுகின்றனர் எனவும் சாடினார்.

ஜெ. சிகிச்சை வீடியோ  உள்நோக்கத்துடன் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது என்றும், ஜெ. அப்பல்லோவில் சிகிச்சை பெறும்போது யாரையும் பார்க்க அனுமதிக்காத நிலையில்,  பாதுகாப்பு விதியை மீறி வீடியோ எடுத்து யார் என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தற்போது வெளியாகி உள்ள வீடியோவில், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் இல்லை என்றும்  ஆர்.கே நகர் தேர்தலை மனதில் கொண்டு வீடியோ வெளியிடப்பட்ட தால் தேர்தல் விதிமீறல் என்றும் அவர் கூறினார்.

இந்த வீடியோ குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது,

உண்மையிலேயே சட்டத்தை மதிப்பவர்களாக இருந்தால் தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை விசாரணை கமிஷனிடம் கொடுத்திருக்க வேண்டும். ஏன் கொடுக்கவில்லை?

ஓராண்டாக கொடுக்காமல் இப்போது வீடியோவை  வெளியிடவேண்டிய நோக்கம் என்ன? நாளை தேர்தலை சந்திக்க வேண்டிய சமயத்தில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன?  மனசாட்சிப்படி வீடியோவை வெளியிட்டதாக கூறும் வெற்றிவேலுக்கு இத்தனை நாள் மனசாட்சி இல்லையா?” என்று கூறி உள்ளார்.

முன்னாள் அமைச்சர் செம்மலை

ஜெயலலிதா சிகிச்சை குறித்த வீடியோவை வெளியிட்டது குற்றச்செயல் என எம்.எல்.ஏ. செம்மலை குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெயலலிதா சிகிச்சை குறித்த வீடியோவை வெளியிட அதிகாரம் கொடுத்தது யார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.