கோத்தகிரி,

ஜெயலலிதாவின் கொட நாடு எஸ்டேட்டில் காவலாளியை அடித்து கொலைசெய்துவிட்டு, எஸ்டேட்டில் உள்ள அறைகள் உடைக்கப்பட்டு கொள்ளை நடந்தது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் அடித்து படுகொலை செய்யப்பட்டார்.  மற்றொரு காவலாளியான கிஷன்பகதூரும் தாக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து கொடநாடு எஸ்டேடில் உள்ள அறைகள் உடைக்கப்பட்டு கொள்ளை நடைபெற்றுள்ளது.

இந்தக் கொலை குறித்து விசாரிக்க டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலையாளிகளை தேடி தனிப்படைகள் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர்.

அதன் காரணமாக அன்றைய தினம் கொடநாடு பகுதிகளில் சுற்றித் திரிந்த சொகுசு கார்கள், வாகனங்கள் குறித்து கோத்தகிரி டானிங்டன், குஞ்சப்பனை சோதனைச் சாவடி பகுதிகளில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்தும் போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

கொள்ளை நடந்த ஆண்டு, கொலையாளியால் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  மற்றொரு காவலாளி கிஷன்பகதூர் கொடுத்த தகவலின் பேரில் கொலையாளியின் மாதிரி படத்தை கம்யூட்டர் மூலம் வரைந்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஓம்பகதூரைக் கொன்ற கொலையாளி ஒருவரை கேரளாவில் தனிப்படைப் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொள்ளை, கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர் கொடநாடு அழைத்து வரப்பட்டு விசாரணை செய்யப்படுவார் என தெரிகிறது.