சாத்தான்குளம்:

சாத்தான்குளம் தந்தை மகன் இரவு முழுவதும் காவலர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டனர் என்று அங்கு பணிபுரியும்  பெண் போலீஸ் ஒருவர் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 19-ஆம் தேதி போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாக்டவுன் நேரத்தை விட கூடுதலாக கடைத் திறந்து வைத்திருந்ததுதான் அவர்கள் மீது சொல்லப்படும் புகாராக இருக்கிறது. இந்த சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன் வந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்ற மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் அவரை ஒருமையில் விமர்சித்ததாக புகார் அளித்திருந்தார். மேலும், அவரிடம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலர் ஒருவரும் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

“ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் ஜூன் 19 அன்று கைது செய்யப்பட்ட பின்னர் இரவு முழுவதும் காவல்துறையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டனர் என்று  ஒரு பெண் தலைமை கான்ஸ்டபிள் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து,  சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ரத்தக் கறைகளைக் கொண்ட காவலர்களின் ரத்து, மற்றும் மேசையை பறிமுதல் செய்வது அவசியம்” என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.