ஜார்க்கண்ட்டில் நீக்கப்பட்ட ரேஷன் கார்டுகளில் கிட்டத்தட்ட 90% உண்மையானவை: ஆய்வு முடிவில் தகவல்

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் நீக்கப்பட்ட ரேஷன் கார்டுகளில் கிட்டத்தட்ட 90% உண்மையானவை என்பது ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளன.

2016-2018ம் ஆண்டுகளுக்கு இடையில் ஜார்க்கண்ட் அரசு செல்லாது என்று அறிவித்த ரேஷன் கார்டுகளில் கிட்டத்தட்ட 90% உண்மையானவை என்று அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை நடவடிக்கை ஆய்வகத்தின் ஆய்வு கூறி இருக்கிறது.

இந்த நீக்கப்பட்ட ரேஷன் கார்டுகளில் கிட்டத்தட்ட 56% ஆதார் உடன் இணைக்கப்படவில்லை. ரேஷன் கார்டுகளை பெருமளவில் நீக்க ஜார்க்கண்ட் அரசு மற்றொரு சுற்றுக்குத் தயாராகி வரும் நிலையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.

அதேநேரத்தில் போதிய ஊட்டச்சத்து இல்லாதது, உணவு பற்றாக்குறையால் 2015ம் ஆண்டு முதல் 2019 வரை பட்டினியால் 23 இறப்புகள் பதிவாகி இருக்கின்றன என சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

2017ம் ஆண்டு அக்டோபரில் சிம்டேகா மாவட்டத்தில் 11 வயது சிறுமி பட்டினியால் இறந்தார். அவரது குடும்பத்தின் ரேஷன் கார்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படவில்லை என்று ரத்து செய்யப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு அது அவரது மரணம் நிகழ்ந்திருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

2017 ஆம் ஆண்டில், பாஜக அரசு, லட்சக்கணக்கான ரேஷன் கார்டுகளை செல்லாது என்று அறிவித்திருந்தது, அவற்றில் பெரும்பாலானவை “போலி என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஆதாருடன் இணைக்கப்படாத ரேஷன் கார்டுகள் என்று 11 லட்சம் கார்டுகள் ரத்து செய்யப்பட்டதாக அரசாங்கம்  கூறியது. பின்னர் இந்த எண்ணிக்கை 6.96 லட்சமாக மாற்றப்பட்டது.

பொருளாதார வல்லுநர்களான கார்த்திக் முரளிதரன், பால் நிஹாஸ் மற்றும் சந்தீப் சுக்தங்கர் ஆகியோரால் இணைந்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.  2016-2018 க்கு இடையில் ஜார்க்கண்டில் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாவட்டங்களில் ரேஷன் கார்டு நீக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்தது. இந்த 10 மாவட்டங்களில் 1.44 லட்சம் ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.