நூறு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு பா.ஜ.க.. எம்.பி. மீது முதல்வர் வழக்கு..

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்-அமைச்சராக இருப்பவர், ஹேமந்த் சோரன்.

அந்த மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா  எம்.பி.யான நிஷிகாந்த் துபே என்பவர், முதல்வர் சோரன் மீது சமூக வலைத்தளங்களில், அவதூறாகக் கருத்து தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அண்மையில் துபே வெளியிட்ட ஒரு பதிவில்’’ நமது முதல்-அமைச்சர் ஹேமந்த் சோரன், கடந்த 2013 ஆம் ஆண்டு மும்பையில் ஒரு பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்’’ எனத் திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறி இருந்தார்.

இதனால் கொந்தளித்த ஹேமந்த் சோரன், ராஞ்சியில் உள்ள சிவில் நீதி,மன்றத்தில், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்த பா.ஜ.க. எம்.பி.துபே 100 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும்’’ என வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த நான்காம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த  அவதூறு வழக்கு மீது மறுநாள்( 5 ஆம் தேதி) விசாரணை நடந்துள்ளது.

முதல்வர் தன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த பின்னரும் துபே ஓய்ந்ததாகத் தெரியவில்லை.

‘முதல்-அமைச்சர் மீது  பலாத்கார புகாரைத் தெரிவித்தவர், மும்பையைச் சேர்ந்த பெண். அவர் மீது வழக்குப் போடாமல் என் மீது ஏன் வழக்கு தொடர வேண்டும்?’’ என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள துபே,’’ இவ்வாறு வழக்கு தொடர்ந்து, முதல்வரை எதிர்த்துப் போராட   வாய்ப்பு அளித்ததற்கு  நன்றி;’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

-பா.பாரதி.