ராஞ்சி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 100 நாட்கள் வேலைத் திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து இயந்திரங்களையும் பறிமுதல் செய்ய முதல்வர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டுள்ளார்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு நிச்சய திட்டத்தின் கீழ் கிராமப் புற மக்களுக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு அளித்து கிராமப்புறங்களில் முன்னேற்றப் பணி நடைபெற்று வருகிறது.   இந்த திட்டத்தின் கீழ் மனித முயற்சி மூலம் மட்டுமே பணிகள் இயற்ற வேண்டும் என்பது விதியாகும்.  இதன் மூலம் கோடிக்கணக்கானோர் பயனடைகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சத்ரா மாவட்டத்தில் இதில் பல முறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் எழுந்தன. இந்த திட்டத்தின் கீழ் போலிப் பெயரில் வருகைப் பதிவேடு தயாரிக்கப்பட்டும் பொக்லைன் இயந்திரம் மூலம் ஒரு குளம் வெட்டப்பட்டு அந்த பணத்தைத் தொழிலாளர்களுக்கு அளித்தாகக் கணக்கு காட்டப்பட்டு மோசடி நடந்துள்ளதாகப் புகாரில் கூறப்பட்டிருந்தது.

இந்த தகவல் அறிந்த ஜார்க்கண்ட் முதல்வர் ஜேமந்த் சோரன் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து இயந்திரங்களையும் பறிமுதல் செய்து ஒரு மாதத்துக்குக் காவல் நிலையத்தில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.   இந்த இயந்திரங்களை 100 நாட்கள் வேலைத் திட்டத்தின் கீழ் பயன்படுத்துவது தெரிந்தால்  மேலும் மூன்று முதல் ஆறு மாதங்களுக்குப் பறிமுதல்  செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

அத்துடன் கிராம துணை ஆணையர்களுக்கு முதல்வர். “கூடியவரை அதிகம் மக்களை பல்வேறு திட்டத்தின் கீழ் பணிக்கு இணக்க வேண்டும்.  கிராமப்புற மக்களுக்கு பணி அளிப்பது அரசுக்கு முதன்மையாகும்.  பிளாக் மற்றும் பஞ்சாயத்து அடிப்படையில் தொழிலாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்குப் பணி அளிக்க வேண்டும்.   ஒரு பஞ்சாயத்தில் குறைந்தது 300 பேருக்குப் பணி அளிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.

மழைக்காலங்களில் பல பணிகள் தற்காலிகமாக நிற்க வாய்ப்பு உண்டு.   எனவே துணை ஆணையர்கள் புதிய பணிகளைக் கண்டறிய வேண்டும்.   எந்த ஒரு கிராம வாசியும் உணவின்றி பட்டினியால் மரணம் அடைந்தார் என்னும் நிலை வரக்கூடாது.  அவ்வாறு செய்தி வந்தால் அது அவமானமானது மட்டும் அல்ல துயரம் அளிக்கக் கூடியதும் ஆகும்” எனவும் உத்தரவு இட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் பசியால் மரணம் அடைந்தது பற்றி கேள்வி எழுந்த போது ஹேமந்த் சோரன் மாநிலத்தில் பட்டினிச் சாவு என்பது கிடையவே கிடையாது என உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கதாகும்.