அடுத்த நிதி ஆண்டில் இருந்து ரூ. 2250 கோடி விவசாய நல நிதி : ஜார்க்கண்ட் அரசு

ராஞ்சி

ஜார்க்கண்ட் அரசு அடுத்த ஆண்டில் இருந்து விவசாய நல நிதியாக ஆண்டுக்கு ரூ. 2250 கோடி வழங்க உள்ளது.

காங்கிரஸ் தற்போது ஆட்சியை பிடித்துள்ள ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் விவசாயக் கடன்களை ரத்து செய்தது. இந்த மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்ததற்கு விவசாயிகளின் அதிருப்தியே காரணம் என கூறப்பட்டு வருகிறது. அதை ஒட்டி பாஜக ஆளும் மாநில முதல்வர்களும் காங்கிரசின் பாணியில் விவசாயக்கடன் தள்ளுபடி குறித்து அறிவித்தனர்.

தற்போது பாஜக ஆட்சி செய்யும் ஜார்க்கண்ட் மாநில அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ரகுபர் தாஸ் விவசாயிகளுக்கான நல திட்டமாக அடுத்த வருடத்தில் இருந்து விவசாயிகளுக்கு நல நிதியை வழங்குவதாக அறிவித்துள்ளார். அதன் படி மத்திய மற்றும் சிறு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஏக்கருக்கும் ரூ.5000 நிதி மாநில அரசு வழங்குகிறது. இந்த நிதி உதவி ஒரு ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் ரூ. 5000 வழங்கப்பட உள்ளது.

இது குறித்து ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் செய்தியாளர்களிடம், “ஜார்க்கண்ட் அரசு வழங்கும் இந்த நிதி உதவி வரும் கணக்கு ஆண்டான 2019-20 ல் இருந்து வழங்கப்பட உள்ளது. இதனால் வரும் 2022 ஆம் ஆண்டு விவசாயிகளின் வருமானத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அத்துடன் இந்த உதவித் தொகை விவசாயிகளுக்கு விதை, உரம் உள்ளிட்ட செலவுகளுக்கு பயன் படும். அதனால் அவர்கள் கடன் வாங்குவதும் குறையும்

இந்த புதிய திட்டத்தின் மூலம் சுமார் 22.76 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள். அரசுக்கு இதனால் ரூ.2250 கோடி அதிக செலவாகும். இந்த உதவித்தொகை 5 ஏக்கர்கள் வரை நிலம் வைத்திருப்போருக்கு மட்டுமே வழங்கப்படும். பிரதமர் மோடி வரும் 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை முன்னேற்றுவதாக வாக்களித்துள்ளார். அதை மனதில் கொண்டு இந்த உதவி அளிக்கப்ப்படுகிறது.” என அறிவித்துள்ளார்.