பீகார் முன்னாள் முதல்-அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உடல்நலம் சரி இல்லாததால், லாலு சிறையில் இருந்து மாற்றப்பட்டு, அங்குள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் உள்ள வார்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் லாலு, அந்த வார்டில் இருந்து மருத்துவமனையின் இயக்குநருக்கு சொந்தமான சொகுசு பங்களாவுக்கு மாற்றப்பட்டார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

லாலுவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி ஜார்கண்ட் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது சிறையில் லாலுவுக்கு விசேஷ சலுகைகள் அளிக்கப்பட்டதற்கு, நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

“மற்ற கைதிகளுக்கு இல்லாத சலுகைகள் லாலுவுக்கு மட்டும் ஏன் அளிக்கப்பட்டது? குறிப்பிட்ட பங்களாவுக்கு மட்டும் அவர் மாற்றப்பட்டது ஏன்? வேறு இடம் இல்லையா? அவருக்கு பணியாற்ற உதவியாளர்கள் நியமிக்கப்பட்டது எப்படி?” என அடுக்கடுக்கான வினாக்களை நீதிமன்றம் எழுப்பியது.

“சட்ட விதிகளை பின் பற்றியே அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டுமே தவிர, தனி மனிதரின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் செயல்படக்கூடாது” என்றும் உயர்நீதி மன்றம் கண்டனம் தெரிவித்தது.

– பா. பாரதி