ராஞ்சி:

பெண் என்று நிரூபிக்க பிறப்புறுப்பை வெட்டி பிறந்த குழந்தையை கொலை செய்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 150 கி.மீ. தொலைவில் உள்ள ஜெய்பிரகாஷ் நகரில் ஓம் நர்சிங் ஹோம் என்ற மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இதில் குதியா தேவி என்பவர் தனது கர்ப்ப பரிசோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். இந்த மருத்துவமனையின் டாக்டர் அனுஜ் குமார் என்பவர் குதியா தேவி வயிற்றை ஸ்கேன் செய்து கருவில் இருப்பது பெண் குழந்தை என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 8 மாதம் முடிவடைந்த நிலையில் அப்பெண்ணுக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று அவரது கணவர் அணில்பாண்டாவிடம் தெரிவித்தார். இதையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டதில் ஆண் குழுந்தை பிறந்தது. ஸ்கேன் முடிவில் பெண் குழுந்தை என்று கூறியதால், அதிர்ச்சியடைந்த அனுஜ்குமார் அவசர அவசரமாக குழந்தையின் பிறப்புறுப்பபை துண்டித்துள்ளார். இதில் குழந்தை இறந்துவிட்டது.

பின்னர் குறைபாடுடன் குழந்தை பிறந்து இறந்துவிட்டது என்று அனுஜ்குமார் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் பெண்ணின் தாய்க்கு தெரியவந்ததையடுத்து அவர் மருத்துவமனை நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அனுஜ்குமார் போலி டாக்டர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.