ரேஷன் தேவை – பணம் வேண்டாம் : ஜார்க்கண்ட் மக்கள்

டில்லி

ஜார்கண்ட் மக்கள் தங்களுக்கு நிதி உதவி அளிப்பதை விட ரேஷனில் குறைந்த விலையில் பொருட்கள் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளதாக ஆய்வறிக்கை கூறுகின்றது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரேஷனில் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.   அப்போது ரேஷனில் ஒரு கிலோ அரிசி ரூ.1 என்னும் விலையில் அளிக்கப்பட்டது.  அதன் பிறகு அரசு ரேஷனில் பொருட்கள் வழங்குவதை நிறுத்தி விட்டது.   அதற்கு பதிலாக அந்தப் பொருட்களுக்கான சந்தை விலையை பயனாளிகள் வங்கிக் கணக்கில் செலுத்தத் தொடங்கியது.  உதாரணமாக ரேஷனில் வழங்கப்படும் அரிசிக்கு பதிலாக கிலோவுக்கு ரூ.31 வழங்கப்படுகிறது.

இவ்வாறு ரேஷன் பொருட்களுக்கான விலையை பணமாக யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, நாகர் ஹவேலி, தாத்ரா போன்ற இடங்களில் மத்திய அரசு தொடங்கியது.    ஆனால் எந்த மாநிலமும் இந்த திட்டத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை.   அதன் பிறகு ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்த திட்டம் அமுலாக்கப்பட்டது.

இந்த  முறை குறித்து ஒரு அரசு சார்ந்த சமூக ஆய்வு ஒன்று ஜார்கண்ட் மாநிலம் நாக்ரி பகுதியில் நடைபெற்றது.   அப்போது சுமார் 96.9% மக்கள் இந்த பணம் வழங்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   மேலும் அதற்கு பதில் ரேஷனில் சலுகை விலையில் பொருட்கள் வழங்குவதை தாங்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.   அத்துடன் வங்கியில் இருந்து பணம் பெற்று பொருட்களை வாங்க சராசரியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 13 மணி நேரம் ஆவதாகவும் தெரிவித்துள்ளனர்.

நக்ரி பகுதியில் உள்ள 12126 ரேஷன் கார்டுதாரர்களில் 13% மக்களுக்கு உதவித் தொகை அளிப்பதில்லை என்பதும் உதவித் தொகை பெறுபவர்களில் 17% மக்களுக்கு மட்டுமே குறித்த நேரத்தில் பணம் கிடைக்கிறது எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வின் மூலம் மக்கள் பணத்துக்கு பதில் ரேஷனில் மானிய விலையில் பொருட்கள் வழங்குவதையே விரும்புவது தெரிய வந்துள்ளது.