ராஞ்சி:

மாநிலத்தில்  3 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த,  சட்டமன்ற உறுப்பினரின் மனைவி சாதாரண கூலித் தொழிலாளி போல உள்ளூர் சந்தையில் காய்கறி விற்பனை செய்து வருகிறார். அவரது இந்த செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நமது மாநிலத்தில் சாதாரண கவுன்சிலர் பதவி கிடைத்தாலே, அவர்களிடன் குடும்பத்தினர் தலைகால் புரியாமல் அலப்பறை செய்து வரும் நிலையில்,  ஜார்கண்ட் மாநிலத்தில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த பாஜக எம்எல்ஏ  லோக்நாத் மேக்டோவின் மனைவி இன்று வரை தனது தள்ளாத வயதிலும்  காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்… இது ஆச்சரியத்தையும், பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. இந்த நிலையில்,  பட்காகோன் தொகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினராக 74 வயதான   லோக்நாத் மேக்டோ மீண்டும் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே  கடந்த 1995, 2000, 2004 ஆகிய வருடங்களில் எம்எல்ஏவாக பணியாற்றி உள்ளார்.

இந்த நிலையில் இவருடைய மனைவி மவுலினி தேவி அங்குள்ள சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.  லோக்நாத் மேக்டோ அவருக்கு கிடைக்கும் சம்பளத்தை, அந்த பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பயன்படுத்தி வருவதாகவும், ஏழை பெண்களின் திருமணத்தை நடத்தி வைக்கவும் உபயோகப்படுத்தி வருவதாலும், தங்களது சொந்த தேவைகளுக்காக மவுலினி தேவி காய்கறி விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தி வருவதாக தெரிவித்து உள்ளார்.

சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மவுலினி தேவி, தனது கணவர் எம்எல்ஏ ஆவதற்கு முன்பே காய்கறி வியாபாரம் செய்து வருவதாகவும், ‘காய்கறி விற்பதுதான் தனது பிரதாமான தொழில் என்றும், இதற்காக காய்கறி தோட்டமும் போட்டுள்ளேன் என்று கூறி உள்ளார்.

தான் ஒருபோதும் தனது  கணவரின் வருமானத்தை நான் எதிர்பார்ப்பதில்லை என்று கூறியிருப்பதுடன்,  தனது கணவர் எம்.எல்.ஏ.வாக இருந்தாலும், நான் காய்கறி விற்பது குறித்து எந்தவித கவுரவ குறைப்பாடாகவும் நினைக்கவில்லை என்றும் பெருமிதமாக தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள லோக்நாத் மேக்டோ, எனது மனைவி காய்கறி வியாபாரம் செய்வது கவுரவ குறைச்சல் அல்ல, அதை நான் பெருமையாக கருதுகிறேன் என்று கூறியவர், அவர் காய்கறி வியாபாரம் செய்து குடும்பத்தை அவர் கவனிக்கிறார்.  நான் மக்களுக்கு சேவை செய்கிறேன்’ என்று மகிழ்ச்சியுடன்  தெரிவித்து உள்ளார்.

லோக்நாத் மேக்டோ கடந்த 2005-ம் ஆண்டு சிறந்த எம்.எல்.ஏ.வுக்கான விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசியல்வாதிகளே… இவர்களைப் போல வாழ கற்றுக்கொள்ளுங்கள்….