சிசாய், ஜார்க்கண்ட்

நேற்று நடைபெற்ற ஜார்க்கண்ட் தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணமடைந்தார்.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் 81 தொகுதிகள் உள்ளன.  5 கட்டமாக நடைபெறும் இந்த சட்டப்பேரவை தேர்தலில்  நேற்று 20 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.   காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை 18 தொகுதிகளிலும் இரு தொகுதிகளில் மாலை 5 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடந்தது.   இதில் 63.36% வாக்குகள் பதிவாகின.

வாக்குப்பதிவையொட்டி 42,000 வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்  ஆயினும் இரு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.    மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள சாய் பாசா தொகுதியில் ஜோஜோ ஹாட்டு என்னும் சிற்றூர் உள்ளது.  இங்கு நக்சல்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது  இந்த சிற்றூரில் காலியாக் நின்றுக் கொண்டிருந்த பேருந்துக்கு நக்சல்கள் தீ வைத்ததால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கும்லா மாவட்டத்தின் சியாய் தொகுதியில் 36ஆம் எண் வாக்குச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் இருந்த அதிவிரைவுப் படை காவலரின் துப்பாக்கியைச் சிலர் பறிக்க முயன்றுள்ளனர்.   அதையடுத்து அவர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.  இருவர் காயம் அடைந்துள்ளனர்.  இந்த தகவலை காவல்துறை துணை இயக்குநர் முராரிலால் மீனா தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி வினய் குமார் சவுபே இந்த சம்பவம் அறிந்து இந்த வாக்குச்சாவடியில் உடனடியாக வாக்குப்பதிவை நிறுத்த உத்தரவிட்டார்.  அத்துடன் இது குறித்து விசாரணை நடத்தவும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.   இந்த இரு சம்பவங்களைத் தவிர மற்றபடி வாக்குப்பதிவு அமைதியாக நடந்துள்ளது.