கமதாபாத்

குஜராத் தலித் தலைவரான ஜிக்னேஷ் மேவானி வடகாம் தொகுதியில் இருந்து சுயேச்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

தலித் தலைவரான ஜிக்னேஷ் மேவானி குஜராத்தை ஆளும் பா ஜ க அரசு தலித் மக்களின் கோரிக்கையை கவனிப்பது இல்லை எனவும்,  தலித் மக்கள் முன்னேற்றத்துக்காக எந்த ஒரு திட்டமும் அறிவிக்கவில்லை என ஏற்கனவே கூறி வந்தார்.  அவர் தேர்தலில் எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை எனவும் ஆனால் பாஜகவை எதிர்க்கும் கட்சிகளுக்கு உதவுவதாகவும் கூறி இருந்தார்.  குஜராத்தில் உள்ள 7%க்கு மேல் உள்ள தலித் வாக்காளகளில் ஒருவர் கூட பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடாது என்னும் நிலையை கொண்டு வருவதே தன் பணி எனக் கூறி இருந்தார்.

தற்போது ஜிக்னேஷ் மேவானி வடக்கு குஜராத் பகுதியில் உள்ள வடகாம் (தனி) தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.   அந்தத் தொகுதியில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ள மணிபாய் வாகேலாவை காங்கிரஸ் கட்சி அங்கு போட்டியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.     சுயேச்சை வேட்பாளரான ஜிக்னேஷ் மேவானிக்கு தனது ஆதரவும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவும் அளிக்கப்படும் என மணிபாய் வாகேலா தெரிவித்துள்ளார்.

பா ஜ க சார்பில் வடகாம் தொகுதியில் விஜய் சக்ரவர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.