அடி பட்ட ஒரே வாரத்தில் கல்விப் பணியை தொடரும் முன்னாள் அமெரிக்க அதிபர்

வாஷிங்டன்

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம் கார்ட்டர் இடுப்பு அறுவை சிகிச்சை முடிந்த ஒரே வாரத்தில் கல்விப் பணியை மீண்டும் தொடங்க உள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஜிம் கார்ட்டர் வாஷிங்டன் நகரில் வசித்து வருகிறார். தற்போது 94 வயதாகும் ஜிம் கார்ட்டர் மிகவும் ஆரோக்யத்துடன் உள்ளார். அடிக்கடி வேட்டைக்கு செல்லும் அவர் ஒரு கல்வி நிலையத்தின் ஞாயிறு வகுப்புகளில் கல்விப் பணியும் செய்து வருகிறார்.

ஜிம்மி கார்ட்டர் கடந்த திங்கள் அன்று தனது இல்லத்தில் இருந்து வான்கோழி வேட்டைக்கு புறப்பட்ட போது திடீரென வழுக்கி விழுந்தார். இதனால் அவருக்கு இடுப்பில் பலத்த அடி பட்டது. அதை ஒட்டி அவர் ஜார்ஜியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

நேற்று முன் தினம் அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார். தற்போது அவர் மருத்துவரின் ஆலோசனைப்படி பயிற்சிகள் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது கல்விப்பணியை வழக்கம் போல் வரும் ஞாயிறு அன்று தொடங்க உள்ளார்.

94 வயதிலும் அடி பட்ட பிறகும் கூட கல்விப் பணியை தொடரும் ஜிம்மி கார்ட்டரை மக்கள் புகழ்ந்து வருகின்றனர்.