சூப்பர் ஓவரின்போது தனது பயிற்சியாளரை இழந்த ஜிம்மி நீஷம்!

வெலிங்டன்: இங்கிலாந்துடன் நியூசிலாந்து அணி ஆடிய உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், சூப்பர் ஓவரில், நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் ஆடியபோது அவரின் பயிற்சியாளர் உயிரிழந்துள்ளார்.

ஜிம்மி நீஷம் சிக்ஸ் அடித்தபோது, அவரின் பயிற்சியாளரும், ஆக்லாந்து பள்ளியின் முன்னாள் இலக்கண ஆசிரியருமான டேவிட் ஜேம்ஸ் கோர்டோன் தனது இறுதி மூச்சை விட்டார் என்று தெரிவித்துள்ளார் அவரின் மகள்.

“சூப்பர் ஓவரின்போது எங்கள் வீட்டிற்கு வந்து என் தந்தையைப் பரிசோதித்த செவிலியர், அவரின் நாடித்துடிப்பு மாறிக்கொண்டிருப்பதை கண்டறிந்தார். என் தந்தை நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவர் தான் மனதில் நினைத்தவைகளுக்கு உண்மையாக வாழ்ந்தார்” என்று கூறியுள்ளார் டேவிட் ஜேம்ஸின் மகள்.

“அவர் எனது பள்ளி ஆசிரியர், பயிற்சியாளர் மற்றும் நண்பர். நீங்கள் கிரிக்கெட்டின் மீது கொண்ட காதல் அலாதியானது. உங்களின் கீழ் விளையாடும் வாய்ப்பை பெற்ற நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். இந்த ஆட்டத்தை நீங்கள் பார்த்து ரசித்தது எவ்வளவு பொருத்தமானது. நீங்கள் அதைப் பார்த்து பெருமையடைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நிகழ்ந்த அனைத்திற்கு நன்றி. அமைதியாக ஓய்வெடுங்கள்” என்று தன் பயிற்சியாளருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார் ஜிம்மி நீஷம்.