ரிலையன்ஸ் வெளியிட்ட ‘ஜியோ-மீட்’ வீடியோ சேவை ஜும் சாட்டின் ‘டூப்ளிகேட்’ ஜும் சாட் குற்றச்சாட்டு

மும்பை :

ரிலையன்ஸ் ஜியோ தனது வீடியோ கான்பரன்சிங் சேவையான ‘ஜியோ-மீட்’ செயலியை கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது, இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ-வின் ஜியோ-மீட் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜூம் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் ‘ஜூம் சாட்’ செயலி ஆகிய இரண்டு செயலிகளின் பயன்பாட்டிற்கும் இடையில் ஒற்றுமை இருப்பதை உணர்ந்த ஜூம் நிறுவனம், ஜியோ-மீட் செயலியில் தங்கள் செயலியில் பயன்படுத்தப்பட்ட அம்சங்களை அச்சு அசலாக ‘காப்பி’ அடித்திருப்பதாக ஜூம் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் சமீர் ராஜே தெரிவித்துள்ளார்.

ஜியோ-மீட்டிற்கு எதிராக வழக்கு தொடுப்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த அவர், இது குறித்து தங்கள் நிறுவனத்தின் சட்ட ஆலோசனைக் குழு முடிவெடுக்கும் என்று கூறினார்.

“எங்கள் பலம் எங்களின் தொழில்நுட்பம் மட்டுமல்ல எங்களின் வாடிக்கையாளர் சேவையே. இது போன்ற போட்டியை எதிர்கொள்வது ஜூம் நிறுவனத்திற்கு இது முதல் முறையல்ல. எங்கள் போட்டி நிறுவனங்கள் அவர்களின் உத்தியைக் கையாள்கிறார்கள்” என்று ராஜே எகனாமிக் டைம்ஸ் இதழுக்குத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக,  ஜூம் வீடியோ கான்பரன்சிங் செயலியின் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்துள்ளது.

இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையிலான கால்வான் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து கடந்த வாரம் 59 சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்தது. சீன பயன்பாடுகள் தடை செய்யப்பட்ட பின்னர், உள்நாட்டு செயலிகளின் பதிவிறக்கம் அதிகரித்துவருகிறது. ஜியோ-மீட் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வாரத்திற்குள் 10 லட்சத்திற்கும் மேலான பதிவிறக்கங்களைப் பதிவு செய்தது.

சீன எதிர்ப்பு உணர்வு பல இந்திய பயனர்களை ஜூம் ஒரு சீன செயலி என்று நினைக்கத் தூண்டியது. இது சீன பயன்பாடு அல்ல என்பதை தெளிவுபடுத்தி ஜூம் ட்விட்டரில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

“இந்திய சந்தையில், ​​ஜூம் தொடர்பான உண்மைகள் குறித்து சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை நாங்கள் அறிகிறோம். ஜூம் நிறுவனம் காலிஃபோர்னியாவின் சான் ஜோஸில் நிறுவப்பட்ட ஒரு அமெரிக்க நிறுவனம், மேலும் இது அமெரிக்க பங்கு வர்த்தகமான நாஸ்டாக் நிறுவனத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.” என்று ஜூம் தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கிறது.

ஜூம் பயன்பாடு குறித்து இந்திய மக்கள் மத்தியில் குழப்பம் நீடிப்பதாகவும், ஜூம் நிறுவனம் சீன வம்சாவளியைச் சேர்ந்தது என்றும் இதன் தரவுகள் அண்டை நாடுகளுடன் பகிரப்படுவதாக தவறான தூண்டுதல்களால் மக்கள் குழப்பத்தில் உள்ளதாகவும், சமீர் ராஜே உறுதிப்படுத்தினார்.

மேலும், “நாங்கள் ஒரு அமெரிக்க நிறுவனம், நாங்கள் எந்த அரசாங்கத்துடனும் தரவைப் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்தியாவில் எங்களிடம் இரண்டு தரவு மையங்கள் உள்ளன, சிலர் அதை வசதியாக மறந்துவிடுகிறார்கள்” என்று ராஜே கூறினார்.

இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்துடன் இதுகுறித்து பேசி வருவதாகவும், ஜூமின் தரவு மையங்கள் மற்றும் தொழில்நுட்ப தகவல்கள் குறித்து விளக்கமளிக்கப்படுவதாகவும் ராஜே உறுதிப்படுத்தினார்.

“எங்கள் நிறுவனத்தின் செயலி எவ்வாறு இயங்குகிறது மற்றும் அதன் தொழில் நுட்பங்களைப் பற்றி விவாதித்து வருகிறோம், எங்கள் தரவுகள் எதையும் பகிரவில்லை” என்றும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுக்க பொருளாதார சரிவை சந்தித்து வரும் வேலையில், இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே இந்த அசாதாரண சூழ்நிலையிலும் லாபமீட்டும் ஒரே நிறுவனமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.