டில்லி:

க்களிடையே இலவச ஆசைக்காட்டி, தகவல் தொடர்பு துறையை கைவசப்படுத்திய முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், தற்போது தனது சுயரூபத்தை காட்டத் தொடங்கி உள்ளது.  இலவச அழைப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ஜியோ, ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குக்கு அழைக்க இனி ஒரு நிமிடத்துக்கு 6 பைசா வசூலிக்கப்படும் தடாலடியாக அறிவித்து உள்ளது.

முகேஷ்அம்பானி தகவல் தொடர்பி துறையில் 2016ம் ஆண்டு காலடி எடுத்து வைத்தார். அதையடுத்து, கடந்த 2017ம் ஆண்டுஜியோ அறிமுகப்படுத்தப்பட்டது. பல்வேறு இலவச அறிவிப்புகளை வெளியிட்டு, அதிரடியாக களத்தில் குதித்த ஜியோ, மற்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்தது. இதன் காரணமாக,   இந்தியாவின் நம்பர் 1 தொலைதொடர்பு நிறுவனமாக திகழ்கிறது.

தொடக்க காலத்தில் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள், மொபைல் போனில் பேசுவதற்கு கட்டணம் வசூலித்து வந்த நிலையில், அன்லிமிட்டட் கால்கள் இலவசம் என்ற அறிவித்து வாடிக்கையாளர்களை இழுத்த ஜியோவுக்கு மத்தியஅரசும் பக்கபலமாக இருந்து வருகிறது.

ஜியோவின் அசூர வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் பிஎஸ்என்எல் உள்பட பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், பலத்த நஷ்டத்தினால் நிறுவனங்களை மூடிவிட்ட நிலையில், ஜியோவுக்கு எதிராக ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் மட்டுமே தாக்குப்பிடித்து வருகிறது.

பல கோடி வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்திய ரிலையன்ஸ் 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கி உள்ளது. சுமார 28 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஜியோ,  ஜியோ சிம் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது முதலில் ஒரு வருடத்துக்கு இலவச வாய்ஸ் மற்றும் இணைய சேவையை வழங்கிவந்தது.

இதுவரை இலவசமாக வழங்கப்பட்டு வந்த, மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கான அழைப்பு களுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். ஜியோ டூ ஜியோ சிம்முக்கு அழைத்தால் கட்டணம் இல்லை

அதன்படி ஜியோ எண்ணிலிருந்து மற்ற நெட்வொர்க்கிற்கு அழைக்கும் ஒவ்வொரு அழைப்புக்கும் நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கு காரணமாக சல்ஜாப்பு காரணங்களை ஜியோ தெரிவித்து உள்ளது. அதன்படி,  கடந்த மூன்று ஆண்டுகளில் ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்களுக்கு நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட 13,500 கோடி ரூபாய் அளவிற்கு கட்டணமாக செலுத்தியுள்ளதாகவும், இதனால் ஏற்பட்டுள்ள இழப்பை, வாடிக்கை யாளர்களிடம் கட்டணம் பெற்று சரிசெய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், பயனாளர்கள் செலுத்தும் இந்த கட்டணத்திற்கு நிகரான இலவச டேட்டாவை பெற்றுக்கொள்ள லாம் என்று அறிவித்துள்ளது.

ஜியோ சிம்கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், இனி எப்போதும் செய்யும் ரீசார்ஜோடு சேர்த்து IUC (interconnect usage charge) ரீச்சார்ஜ் செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது.

இந்த நடைமுறையானது இன்று ( அக்டோபர் 10 தேதி)  முதல் அமலுக்கு வருகிறது. ப்ரீ பெய்ட் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் இந்த கட்டண முறை பொறுந்தும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோவின் இந்த கட்டண அறிவிப்பு வாடிக்கையாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

‘பெரும்பாலான வாடிக்கையாளர்களை தனது பக்கம் திருப்பி வைத்துள்ள ஜியோ தனது சுயரூபத்தை வெளிக்காட்டத் தொடங்கி உள்ளதாகவும், இதுவரை வழங்கப்பட்டு வந்த இலவச சேவைகளுக்கான பணத்தையும் பல்வேறு வழிகளில் வாடிக்கையாளர்களிடம் இருந்து விரைவில் வசூலிக்கும் என்றும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.