புதுச்சேரி:

ஜிப்மர் மருத்துவமனையில் பெண் டாக்டர் ஒருவர் விஷ ஊசி போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

புதுச்சேரி கதிர்காமம் ஆனந்தா நகர் இளங்கோ தெருவில் உள்ள கணபதி அப்பார்ட்மென்டில் வசித்து வந்தவர் ஷாலினி. இவரின் மகள் ரேஷ்மி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்களது சொந்த ஊர் கர்நாடக மாநிலம் மைசூர். ரேஷ்மி கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ். மற்றும் எம்.டி. படிப்பை முடித்து, பின்னர் ஜிப்மர் மருத்துவமனையிலேயே டாக்டராக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் ரேஷ்மியின் தாய் ஷாலினி மைசூர் சென்றார். இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் ரேஷ்மி மருத்துவமனை பணிக்கு வரவில்லை. இதனால் அவருடன் பணிபுரியும் டாக்டர்கள் ரேஷ்மியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால், அவர் செல்போனை எடுக்கவில்லை. உடனே ரேஷ்மி வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

அப்போது அவருடைய வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. கதவை பல முறை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரேஷ்மி அவருடைய அறையில் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது ரேஷ்மி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. ரோஷ்மி விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து ரேஷ்மி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஜிப்மர் மருத்துவமனையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.