ஸ்ரீநகர்:

காஷ்மீர் ராணுவ வெடிமருந்து கிடங்கு அருகே பாஜக மூத்த தலைவர்கள் வீடு கட்ட பிளாட் வாங்கியிருப்பதற்கு ராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காஷ்மர் மாநில சபாநாயகர் நிர்மல் சிங், துணை முதல்வர் கவீந்தர் குப்தா உள்பட மூத்த பாஜக தலைவர்கள் சிலர் நக்ரோத்தா பகுதியில் உள்ள ராணுவ வெடிமருந்து கிடங்கு அருகே உள்ள 12 ஏக்கர் நிலத்தில் ஒரு நிறுவனம் மூலம் பிளாட் வாங்கியுள்ளனர். இதில் 2 ஆயிரம் சதுர மீட்டர் பிளாட்டில் துணை சபாநாயகர் நிர்மல் சிங் வீடு கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளார்.

இதற்கு ராணுவ கமாண்டர் ஜெனரல் சர்ண்ஜீத் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். கடந்த மார்ச் 19ம் தேதி எழுதிய கடிதத்தில் வீடு கட்டப்படுவது சட்டவிரோதமாகும். வெடிமருந்து கிடங்கு அருகே கட்டுமான பணி மேற்கொள்வது பாதுகாப்பை மீறிய செயல். அதனால் கட்டுமான பணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த பகுதி பாதுகாப்பானது கிடையாது’’ என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கட்டுமான பணியை நிறுத்துமாறு உள்ளாட்சி அமைப்பிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அவர்கள் இதை கண்டுக் கொள்ளவில்லை. இது பாதுகாப்பு விதிமீறலாகும்’’ என்றார்.

இது குறித்து நிர்மல் சிங் கூறுகையில்,‘‘இதன் பின்னால் அரசியல் காரணம் உள்ளது. நான் எந்த வகையிலும் சட்டத்தை மீறவில்லை’’ என்றார்.

துணை முதல்வர் கவீந்தர் ஆப்தா, பாஜக எம்பி ஜூகல் கிஷோர் உள்ளிட்டோரும் இங்கு பிளாட் வாங்கி வீடு கட்டுமான பணிகளில் மும்முரமாக உள்ளனர். சபாநாயகர் நிர்மல் சிங் முன்னாள் துணை முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.