கத்துவா சம்பவம் குறித்து பாஜக எம் எல் ஏ சர்ச்சைப் பேச்சு

ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநிலத்தில் நடந்த சிறுமி பலாத்காரக் கொலை குறித்து பாஜக முன்னாள் காஷ்மீர் அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.  இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் காஷ்மீர் மாநில பாஜக அமைச்சர்கள் கலந்துக் கொண்டது சர்ச்சைக்குள்ளாகியது.

அதை ஒட்டி அவர்கள் அமைச்சரவையில் இருந்து விலகினார்கள்.   அவ்வாறு அமைச்சரவையில் இருந்து விலகியவர்களில் லால்சிங் என்பவரும் ஒருவர் ஆவார்.  தற்போது காஷ்மீர் மாநில சட்டசபை உறுப்பினராக மட்டும் இருக்கும் அவர் மேலும் சர்ச்சையைக் கிளப்பும் வகையில்பேசி உள்ளார்.

செய்தியாளர்களிடம் லால் சிங், “காஷ்மீர் மக்களை அவமதிக்க செய்த சதி திட்டம் தான் கத்துவா சம்பவம் ஆகும்.   இதில் சி பி ஐ விசாரணை அவசியம் தேவை.  அதை வேண்டாம் என்பவர்களிடம் நான் சிபிஐ என்பது பாகிஸ்தான் நாட்டு விசாரணை ஆணையமா என கேட்க விரும்புகிறேன்” என கூறி உள்ளார்.

இது காஷ்மீர் மக்களிடையே கடும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.