புராதன பட்டு ஆலையை கலை மையமாக மாற்றும் காஷ்மீர் அரசு

ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள சுமார் 120 ஆண்டுகள் பழமையான பட்டு ஆலையை கலை மற்றும் கலாசார மையமக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் சுமார் 120 வருடங்களுக்கு முன்பு அப்போதைய அரசரான மகாராஜா பிரதாப் சிங் என்பவரால் ஒரு பட்டு ஆலை அமைக்கப்பட்டது. வெகு காலம் முன்பிருந்தே காஷ்மீர் பட்டுக்கு நல்ல கிராக்கி இருந்து வந்தது. இதில் சுமார் 2000 ஊழியர்கள் பணி புரிந்து வந்தனர். ஒரு காலத்தில் நல்ல உற்பத்தியுடன் இருந்த இந்த ஆலையில் சிறிது சிறிதாக உற்பத்தி குறையத் தொடக்கியது.   இதனால் ஆலை மிகந்த இழப்பை சந்தித்தது.

இந்த ஆலையில் 1980-81 ஆம் வருடம் 57000 கிலோ உற்பத்தி நடந்தது. அது சிறிது சிறிதாக குறைந்து 1989-90 ஆம் வருடம் 16000 கிலோ மட்டுமே உற்பத்தி ஆனது. இதனால் அந்த ஆலை நடக்க முடியாத சூழ்நிலை உருவானது. அதை ஒட்டி இந்த ஆலை மூடப்பட்டது. இந்த ஆலையை மீண்டும் இயங்க வைக்க பலவித முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் எதுவும் பலன் அளிக்கவில்லை.

இந்த நிலையில் காஷ்மீர் மாநில தொழில் மற்றும் வர்த்தகத் துறை அலுவலர் சஜித் நசீர், “பிரம்மாண்டமான இந்த ஆலையின் வளாகத்தில் ஒரு கலை மற்றும் கலாச்சார மையம் தொடங்கப்பட உள்ளது. உலக வங்கியின் நிதி உதவியுடன் தொடங்கப்படும் இந்த மையம் இந்த வளாகத்தின் பெருமையை காப்பதுடன் நாட்டின் கலை மற்றும் கலாசாரத்தை குறித்து அனைத்து நாட்டினருக்கும் உதவும் வகையில் அமைக்கப்படும்.

இந்த வளாகத்தை பார்வை இட்ட உலக வங்கி குழுவினர் இந்த பட்டு ஆலை வளாகம் இவ்வாறு பாழடைந்துள்ளதைக் கண்டு அதிர்ந்தனர். இந்த ஆலையை முன்பு போல சீரமைத்து இதை ஒரு கலை மற்றும் கலாச்சார மையமாக மாற்ற வேண்டும் என்பது உலக வங்கியின் யோசனை ஆகும். இந்த மையத்தின் வடிவமைப்பை பலரிடம் கோரி உள்ளோம். தேர்ந்தெடுக்கப்படும் வடிவமைப்பின் படி மையம் அமைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.