ராஞ்சி: ஜார்க்கண்ட் தேர்தலில் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கூட்டணி கட்சிகளுக்கு ஹேமந்த் சோரன் நன்றி தெரிவித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை எழுப்பிய ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. கருத்துக் கணிப்பின்படி, காங்கிரஸ் கூட்டணி அறுதி பெரும்பான்மை எட்டியிருக்கிறது.

இந்த கூட்டணி, 46 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது. ஆளும் பாஜக 25 தொகுதிகளில் மட்டுமே வென்றிருக்கிறது. இதையடுத்து முதலமைச்சர் ரகுபர்தாஸ் தமது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தையும் அவர் ஆளுநரிடம் நேரில் சென்று அளித்தார்.

வெற்றி குறித்து பேசிய ஜேஎம்எம் தலைவரும், முதலமைச்சர் வேட்பாளருமான ஹேமந்த் சோரன், தாம் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வென்றிருக்கிறார்.

தும்கா தொகுதியில் பாஜக வேட்பாளரும், அமைச்சருமான லூயிஸ் மராண்டியை 13,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். மற்றொரு தொகுதியான பாரய்ட்டில் , பாஜக வேட்பாளர் மால்ட்டோவை 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் சாய்த்தார்.

வெற்றி குறித்து பேசிய ஹேமந்த் சோரன், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட அனைத்து காங்கிரஸ் தலைவர்களுக்கும் நன்றி கூறுவதாக தெரிவித்தார்.

இந்த மாநிலத்தின் புதிய அத்தியாயம் இன்று முதல் தொடங்குகிறது. மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை வீண் போகாது, இந்த வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி என்றும் சோரன் கூறினார்.