ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் செய்தியாளருக்கு பேட்டி அளித்துள்ளார்.

வரும் மக்களவையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் எதிர்கட்சி கூட்டணியில் காங்கிரஸுக்கு 7 தொகுதிகள், ஜே எம் எம் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா) கட்சிக்கு 4. ஜேவிஎம் கட்சிக்கு 2 மற்றும் ராஷ்டிய ஜனதா தளத்துக்கு 1 என தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும் ஜே எம் எம் கட்சி தலைவருமான ஹேமந்த் சோரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியில் ஹேமந்த் சோரன், “எங்கள் கட்சி 4 இடங்களில் மட்டுமே போட்டி இடுவதற்கு காரணம் காங்கிரசுடன் நீண்ட நாட்கள் நட்பில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு அதிக இடங்களும் சட்டப்பேரவை தேர்தலில் ஜே எம் எம் கட்சிக்கு அதிக இடங்களும் அளிக்கப்படும் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.

இடது சாரிகளையும் இதில் இணைக்க எண்ணினோம். ஆனால் அவர்கள் அதிக தொகுதிகளை கேட்டதால் இணைக்க முடியவில்லை.

கடந்த 5 ஆண்டுகளில் பாஜக மத்தியிலும் மாநிலத்திலும் தவறான ஆட்சி மூலம் நாட்டையே பாழாக்கி உள்ளது. தற்போதுள்ள முக்கிய பிரச்னை நிலம் கையகப்படுத்துதல் மற்றும் வன உரிமை சட்டம் ஆகிய இரண்டும் ஆகும். உச்சநீதிமன்றம் எமது மக்களை வனங்களில் இருந்து அப்புறப்படுத்த இடைக்கால தடை விதித்துள்ளது.

ஆனால் மக்களை அப்புறப்படுத்துவது தொடர்கிறது. இதனால் 18 லட்சம் பூர்வ குடியினர் இடமாற்றம் செய்யப்பட்டுளனர்.   அரசு மேலும் மேலும் அதிக அதிகாரங்களை வனத்துறை அதிகாரிகளுக்கு அளித்து  பூர்வ குடியினரை துயருக்கு உள்ளாக்குகிறது.

விளை நிலங்கள் பூர்வ குடிகளிடம் இருந்து பிடுங்கப்பட்டு அதானி போன்றவர்களின் கார்பரேட் நிறுவனங்களுக்கு விற்க ரகுபர் தாஸ் அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தங்கள் வகை செய்துள்ளது. அதை நாங்கள் எதிர்த்ததால் அவர்களால் அமுலாக்கம் செய்ய முடியவில்லை. இதனால் எங்கள் கட்சியின் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மீது வழக்கு உள்ளது.

எனவே நிலங்களை கையகப்படுத்த அரசு சட்டவிரோத நடவடிக்கைகளை செய்து வருகிறது. முன்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த கிராம சபைகள் கலைக்கப்பட்டு இதற்கு தலையாட்டுகிற புதிய சபைகளை அரசு நியமித்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப அளிப்பது தான் எங்கள் முதல் நடவடிக்கையாக இருக்கும். எங்கள் கட்சி பூர்வகுடிகளின் நன்மை மீது அக்கறை கொண்டுள்ளது.

தற்போது சமூக நலத் திட்டங்களான ரேஷன், மதிய உணவு, ஓய்வூதியம் போன்றவை ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் 20 பேர் உணவின்றி மாண்டுள்ளனர். படிக்காத ஏழை மக்களிடம் ஆதார் கட்டாயமாக்கப் படுவது எந்த வகையில் நியாயம் ஆகும்? எனவே ஆதார் அற்ற எளிதான முறையை கொண்டு வந்து சமூக நலத் திட்டங்களை வெற்றி பெறச் செய்ய திட்டம் தீட்ட உள்ளோம்.

குடிக்க நீர் இன்றி தவிக்கும் ஜார்க்கண்ட் மக்களுக்கு பாலகோட் விமானப்படை தாக்குதல் குறித்து எவ்வித அக்கறையும் இருக்காது. எது தேவையோ அதை இந்த அரசு செய்வதில்லை..

நமது பிரதமர் திருடர்களுக்கு காவல்காரராக இருக்கிறார். ஆம். இந்த மாநிலத்தில் பல காவலர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. எனவே மாவட்ட ஆளுநர்கள் மூலம் அரசின் செலவைக் குறைத்து ஊதிய பாக்கிகளை வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.