மத்தியஅமைச்சர் ராஜ்நாத்சிங் வீடு முன்பு காங்கிரஸ் மாணவர்கள் போராட்டம்!

--

டில்லி,

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்துவந்த மாணவர் காணாமல் போனது குறித்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வீடு முன்பு போராட்டம் நடத்தினர்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் காணாமல்போன மாணவரை கண்டுபிடிக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தி அடைந்த சகமாணவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

jnu

கடந்த அக்டோபர் 15ந் தேதி காலை 11 மணி முதல் பயோடெக்னாலஜி பிரிவு மாணவர்  நஜீப் என்பவரை காணவில்லை. இவர் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்திருக்கும் மஹி – மாந்தவி விடுதியில் தங்கியிருந்தார்.

அங்கு அவருக்கும் மற்றொரு மாணவ பிரிவான ஏபிவிபி மாணவ அமைப்பைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அன்று இரவு விடுதி காப்பாளர் முன்னிலையில் சில மாணவர்களும், பாதுகாப்பு ஊழியர்களும் நஜீப்பை  தாக்கியதாக கூறப்படுகிறது.  இதையடுத்து நஜீப் காணாமல் போனார்.

நஜீப் காணாமல் போனதற்கு ஏபிவிபி மாணவ அமைப்புதான் காரணம் என உடன் படிக்கும் சக மாணவர்கள் குற்றம்சாட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஜேஎன்யு மாணவர்கள் கூறுகின்றனர். தன் ஒரு பகுதியாக பல்கலைக்கழக துணை வேந்தர் ஜகதீஷ் குமார் உட்பட உயரதிகாரிகள் சிலரை கல்லூரி வளாகத்தினுள் சிறைபிடித்து வைத்து போராடினர்.

jnu1

மாணவரை கண்டுபிடிக்கக்கோரி கடந்த 8 நாட்களாக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் மாயமான மாணவனை கண்டுபிடிக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.  இதனால் ராஜ்நாத் சிங் இல்லத்தின் முன்பாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, உள்துறை அமைச்சக அலுவலகம் முன்பு கடந்த வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பாக வசந்த் கஞ்ச் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த மாணவரை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்கும்படி டெல்லி போலீசாருக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உத்தரவிட்டுள்ளார்.

ஜே.என்.யு. பல்கலைக்கழக வளாகம் இரண்டாவது முறையாக மீண்டும்  சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.