பகோடா தயாரித்த மாணவருக்கு ரூ. 20000 அபராதம் விதித்த பல்கலைக் கழகம்

டில்லி

பிரதமருக்கு எதிராக பகோடா தயாரித்து போராட்டம் நடத்திய ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக எம் பில் மாணவருக்கு ரூ. 20000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில் அறிவித்தபடி வேலை வாய்ப்பு அளிக்கவில்லை என புகார் எழுந்தது.   அதற்கு பதில் அளித்த மோடி பகோடா தயாரித்து விற்பதும் ஒரு வேலை வாய்ப்பு தான் எனக் கூறினார்.  இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியது.  நாட்டில் பலரும் அவருடைய பேச்சுக்கு எதிராக பகோடா தயாரித்து போராட்டம் நடத்தினார்கள்.

இதை ஒட்டி டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும் இத்தகைய போராட்டங்கள் நடந்தன.   இந்தக் கல்லூரியில் எம் ஃபில் படித்து வரும் மாணவர் மனிஷ் குமார் மீனா.   இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்.   இவரும் வேறு நான்கு மாணவர்களும் சேர்ந்து பகோடா தயாரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை விசாரித்த பல்கலைக்கழக நிர்வாகம் மனீஷ்குமார் மீனாவுக்கு ரூ.20000 அபராதம் விதித்துள்ளது.   அத்துடன் அவரை மாணவர் விடுதியில் இருந்து வெளியேற்றி உள்ளது.   அவர் தனது ஆய்வை வரும் 21 ஆம் தேதி அளிக்க உள்ளார்.  அதர்கு முன்பு இந்த பணத்தை அவர் கட்டினால் மட்டுமே ஆய்வை அளிக்க முடியும்.   பணம் இல்லாததால் மனீஷ் மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்.

மனீஷ், ”நாட்டீன் பிரதமர் மக்களை பகோடா செய்து விற்குமாறு கூறுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.   எனவே எனது எதிர்ப்பை தெரிவிக்க இவ்வாறு போராட்டம் நடத்தினேன்.  அதற்காக எனக்கு அபராதம் விதித்தது பல்கலைக்கழகத்தின் பெருமைக்கு பெரும் இழுக்காகும்.  அத்துடன் நான் உடனடியாக் அபராதம் செலுத்த முடியாததால் தேவை இல்லாமல் எனது கல்விக் காலம் நீள்கிறது.  இது குறித்து சட்டத்தை அணுக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.