சென்னை:

டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டது அநீதி, இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.

இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியார்களை சந்தித்த நடிகரும்  நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தார்.

அப்போது,  டெல்லி  ஜே.என்.யு  மாணவர்கள் தாக்கப்பட்டது கவலை அளிக்கிறது. மாணவர்கள் மீதான தாக்குதல்  பீதியை ஏற்படுத்துகிறது. இது அநீதி, இந்த சர்வாதிகார போக்கு மாற வேண்டும் என கடுமையாக சாடினார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் விவகாரத்தில், அதிமுக மாறி மாறி பேசி வருகிறது என்று குற்றம் சாட்டியவர், அவர்களது வியாபாரம் நடக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் அதனை செய்கிறார்கள் என்றார்.

மேலும், தமிழக சட்டப்பேரவையில், நியமன ஆங்கிலோ இந்தியன்  சட்டப்பேரவை உறுப்பினர் பதவி நீக்கம் குறித்து முடிவு எடுக்கப்படது தவறு என்றும்,  நாடோடிகளாக பல நூற்றாண்டுகளாக இருப்பவர்கள் அவர்கள். அவர்களும் இந்தியர்கள் தான். அவர்கள் எங்கே செல்வார்கள், அவர்களுக்கும்  முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.

தமிழகத்தை இருக்க வேண்டிய இடத்திற்கு கொண்டு வந்து வைக்க வேண்டிய கடமை அனைத்து தமிழர்களுக்கும் உண்டு என்று கூறிய கமல், அதற்கு உழைப்பு, வியர்வை, செல்வம் உள்ளிட்டவற்றை முதலீடாக செய்ய வேண்டும், இந்த கடமை ரஜினிகாந்துக்கும் உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.