டில்லி

டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை இரு வருடங்களுக்கு மூடி விட்டு அதன் பெயரை சுபாஷ் சந்திர போஸ் பல்கலைக்கழகம் என மாற்ற வேண்டும் என சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் உலகப் புகழ் பெற்றதாகும்.  சமீபத்தில் இந்த பல்கலைக்கழகத்தின் விடுதிக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது குறித்து மாணவர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.    நாடாளுமன்ற குளிர் காலத் தொடர் முதல் நாளன்று முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதால் கடும் பதட்டம் நிலவி வருகிறது.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சாமி இந்த பல்கலைக்கழகத்தை பற்றித் தெரிவித்த கருத்து மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது.  ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்ட  சுப்ரமணியன் சாமி செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர், “ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இரண்டு வருடங்களுக்கு மூட வேண்டும்.    அங்குள்ள சமூக விரோதிகள் அனைவரையும் நீக்க வேண்டும்.   அதன் பிறகு அந்த பல்கலைக்கழகத்துக்கு சுபாஷ் சந்திரபோஸ் பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றி மீண்டும் திறக்க வேண்டும்.

நேருவின் பெயரில் பலகல்வி நிலையங்கள் உள்ளன.  போஸ்  பெயரை வைப்பதால் மாணவர்களுக்கு நேர்மறை எண்ணங்களின் தாக்கங்கள் அதிகரிக்கும்.   நேருவைப் போல் சோசலிச வாதியாகவோ மதச்சார்பற்றவராகவோ இல்லாமல் தேசிய வாதியாக உள்ள போஸ் பெயரை இந்தப் பல்கலைக்கழகத்துக்கு வைக்க வேண்டும்” எனக் கூறி உள்ளார்.