வாஷிங்டன்: காஷ்மீர் மக்களின் உரிமைகள் மீட்கொணரப்பட வேண்டுமென்றும், இந்திய அரசின் சிஏஏ மற்றும் என்ஆர்சி சட்டங்களில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன். இவர் அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக வெளியிடப்பட்ட பாலிசி பேப்பரில், “காஷ்மீர் மக்களின் அனைத்து உரிமைகளும் மீண்டும் மீட்கொணரப்படுவதற்கான அனைத்துவித நடவடிக்கைகளும் இந்திய அரசால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

காஷ்மீரில் நடைபெறும் அமைதிப் போராட்டங்களை தடுத்தல், இணைய சேவையை முடக்குதல் அல்லது மெதுவாக்குதல் போன்றவை ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும்” என்றுள்ளார் ஜோ பைடன்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அஸ்ஸாம் மாநிலத்தில் என்ஆர்சி பதிவேட்டை அமல்படுத்துவதில் இந்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது” என்றார்.

பல்லாண்டுகள் அமெரிக்க செனட் சபை உறுப்பினராகவும், ஒபாமாவின் கீழ் 8 ஆண்டுகள் துணை அதிபராகவும் பணியாற்றிய ஜோ பைடன், இந்தியா மற்றும் அமெரிக்க இந்தியர்களின் சிறந்த நண்பராக அறியப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.