பிராமணர்களுக்கு மட்டுமே வேலை!: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்  

பிராமணர்களுக்கு மட்டுமே வேலை என்று  விளம்பரப்படுத்திய சென்னை தனியார் நிறுவனத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கோவை.ராமகிருஷ்ணன்  நம்மிடம் தெரிவித்துள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரை பகுதியில் இயங்கி வருகிறது ஏகோர் என்ற மல்டி நேசனல் நிறுவனம்.

இந்நிறுவனம் சமீபத்தில், பொது மேலாளர் (திட்டம், விற்பனை, நிர்வாகம்)  பதவிகளுக்கு நபர்கள் வேண்டி நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தது.

அதில் குறிப்பிட்ட பதவிகளுக்குத் தேவையான படிப்பு, முன் அனுபவம் ஆகியவற்றோடு, “பிராமணர்கள் மட்டும்” (barahmins oly) என்று பெரும் எழுத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்நிறுவனத்தின் நடவடிக்கையை சமூகவலைதளத்தில் பலரும் கண்டித்துவருகிறார்கள்.  “குறிப்பிட்ட பதவிக்கு விண்ணப்பிப்பவர்களின் கல்வி, முன் அனுபவத்தை தனியார் நிறுவனம் குறிப்பிடுவது இயல்பே. ஆனால் குறிப்பிட்ட சாதியினர்தான் வேண்டும் என்பது என்ன நியாயம்” என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், “கோயில்களுக்குள் பிராமணர்கள் உள்ளிட்ட சில உயர்சாதியினர் மட்டுமே நுழைய முடியும் என்றும், கருவறைக்குள் பிராமரணர்கள் மட்டுமே நுழைந்து அர்ச்சனை செய்ய முடியும் என்றும் விதிகள் வகுக்கப்பட்டிருந்தன. ஆனால் முற்போக்காளர்கள் பலரது தொடர் போராட்டத்தால்  கோயில்களுக்குள் அனைத்து சாதியினரும் செல்லும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதே போல அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியும் என்பது  தமிழகத்தில் செயல் நிலைக்கு வரவில்லை என்றாலும் கேரளாவில் நடந்திருக்கிறது. இந்த நிலையில் அடுக்ககங்களில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே வீடு வாங்க முடியும் என்ற விளம்பரங்கள் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்கு எதிர்ப்புகள் எழுந்தவண்ணம்தான் இருக்கின்றன. இந்த நிலையில் வேலைக்கும் குறிப்பிட்டசாதியினர்தான் வேண்டும் என்று தனியார் நிறுவனங்கள் அறிப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று” என்றும் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் “rajeshkumar (முகமூடி)” என்கிற பெயரில் இயங்கும் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், குறிப்பிட்ட நிறுவனத்தின் அலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு இது குறித்து கேட்டதாகவும், அதற்கு அவர்கள் தங்களது  அலுவலகத்தில் எல்லாரும் வெஜிடேரியன்கள் என்பதால் வெஜிடேரியன்களாக எதிர்பார்ப்பாபதாக தெரிவித்ததாகவும் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், “ஏகோர்” நிறுனத்தை தொடர்புகொண்டு  பேசினோம். ஏகோர் நிர்வாகத்தின் தரப்பில் பேசியவர், “பிராமின்ஸ் ஒன்லி என்ற வாசகம் எழுத்துப்பிழையாக வந்துவிட்டது” என்றார்.

“உங்கள் விளம்பரத்தில் வேறு பல எழுத்துப்பிழைகள் இருக்கின்றன. ஆனால் பிராமினஸ் ஒன்லி என்பது எழுத்துப்பிழை இல்லாமல்தானே வந்திருக்கிறது.. தவிர முழுமையான இருவார்த்தைகள் தவறுதலாக வந்திருக்குமா” என்றோம்.

அதற்கு, “பிறகு பேசுங்கள்” என்று அலைபேசி தொடர்பை துண்டித்துவிட்டார்கள். மீண்டும் மீண்டும் அழைத்தபோதும் நமது அழைப்பை ஏற்கவில்லை.

இந்நிலையில் தொடர்ந்து பலரும் சமூகவலைதளங்களில் ஏகோர் நிறுவனத்துக்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்தபடி இருக்கிறார்கள். அந்நிறுவனம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கோவை. ராமகிருஷ்ணன், ஏகோர் நிறுவனத்தை எதிர்த்து போராட்டம் நடத்த இருப்பதாக நம்மிடம் தெரிவித்தார். 

மேலும் அவர் தெரிவித்ததாவது:

“பல நூறு ஆண்டுகாலமாக வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இட ஒதுக்கீட்டு முறை உருவானது.  இதை அரசு நிறுவனங்கள் கடைபிடிக்கின்றன. இதே முறை தனியார் நிறுவனங்களிலும் அமலாக்கப்படும் என்று போராடிக்கொண்டிருக்கும் வேளையில், பிராமணர்களுக்கு மட்டுமே நூறு சதவிகித இட ஒதுக்கீடு என்று ஒரு தனியார் நிறுவனம் அறிவித்திருப்பது மீண்டும் மனு தர்மம் கோலோச்சுவதையே எடுத்துக்காட்டுகிறது. தந்தை பெரியார் போன்றவர்கள் ஆயுள் முழுதும் அர்ப்பணிப்புடன் போராடிய பிறகும் இந்த சூழல் நிலவுவதை கவனிக்க வேண்டும்.

தவிர தனியார் நிறுவனம் என்பதற்காக  அவர்கள் விருப்பத்துக்கு நடந்துகொள்ள முடியாது. அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் தொழில் அல்லது நிறுவனம் நடத்த உரிமை (லைசென்ஸ்) பெற்றிருப்பார்கள்.  அரசின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டுத்தான் அன்றாட அலுவலக நடைமுறைகள் அங்கும் பின்பற்றப்படும்.

இந்த நிலையில் சட்டத்துக்கு விரோதமாக தீண்டாமையை கடைபிடிப்பதை ஏற்க முடியாது.

தனியார் நிறுவனத்துக்குள் நடப்பதைப் பற்றி மற்றவர் பேசக்கூடாது என்று சொல்ல முடியாது. தனியார் நிறுவனத்தில் மட்டுமல்ல.. ஒருவரது வீட்டுக்குள்ளேயே கூட கொலை நடக்கிறது என்பதற்காக அதை கண்டுகொள்ளாமல் விட முடியுமா. அநியாயம் எங்கு நடந்தாலும் அதை எதிர்த்து தடுப்பது அனைவரின் சமூகக் கடமை.

தாங்கள் சைவ உணவு மட்டும் உண்பதால் பிராமணர்களை மட்டும் தேர்ந்தெடுப்பதாக அந்த நிறுவனம் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. அப்படியானால் அந்நிறுவனத்தில் பிளம்பர், எலக்ட்ரிசியன், துப்புரவு தொழிலாளிகள் எல்லோரும் பிராமணர்கள்தானா?

குறைந்த ஊதியம் பெறும் உடலுழைப்பு தொழிலாளிகளை பிற சாதியிலிருந்து தேர்ந்தெடுப்பதும், “உயர் பதவிகள்” எனப்படும் உழைப்பே இல்லாத பெரும் சம்பளத்துக்கு பிராமணர்களை மட்டும் தேர்ந்தெடுப்பதும் அநியாயம்.

இப்படி பிற சமூகத்தினரை ஒதுக்கும் நிறுவனம், எந்தவொரு விதத்திலும் மற்ற சமூகத்தினரிடமிருந்து எதையும் பெறக்கூடாது. அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, செருப்பு உள்ளிட்ட அனைத்தையும் அவர்களே செய்துகொள்ளவேண்டும்.

சிலர் இன்னொன்றும் சொல்கிறார்கள். அரசு வேலை வாய்ப்பில் பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லையே என்று. பொது வகுப்பினர் என்கிற முறையில் அவர்களும்தானே அரசு பணிக்குப் போட்டி போடுகிறார்கள்? அவர்களது எண்ணிக்கை மூன்று சதவிகிதம்தான். ஆனால் அந்த அளவுக்குத்தான் உயர்  பதவிகளில் பிராமணர்கள் இருக்கிறார்களா?

தவிர குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும்தான் அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை என்றும் சில விளம்பரங்கள் வருகின்றன. இதையும் அரசு தலையிட்டு தடுக்க வேண்டும்.

மீண்டும் சொல்கிறேன். அந்த நிறுவனத்துக்கு எதிராக விரைவில்  மிகப்பெரும் போராட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்தும்” என்று சொல்லி முடித்தார் கோவை.ராமகிருஷ்ணன்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: job-opportunity-only-brahmins-private-company-announcement-controversy- chennai-accor tpdk k.ramakrishnan kovai against Chennai protest Struggle, பிராமணர்கள் மட்டும் வேலை சென்னை நிறுவனம் ஏகோர் விளம்பரம் எதிர்ப்பு த.பெ.தி.க. போராட்டம்  கோவை ராமகிருஷ்ணன் அறிவிப்பு
-=-