பிராமணர்களுக்கு மட்டுமே வேலை!: “ஸ்பெல்லிங் மிஸ்டேக்” என்கிறது சென்னை தனியார் நிறுவனம்  

பிராமணர்களுக்கு மட்டுமே வேலை என்று சென்னை தனியார் நிறுவன அறிவிப்பால் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், “அது ஸ்பெல்லிங் மிஸ்டேக்” என்று  patrikai.com  இதழிடம் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரை பகுதியில் இயங்கி வருகிறது ஏகோர் என்ற மல்டி நேசனல் நிறுவனம்.

இந்நிறுவனம் பொது மேலாளர் (திட்டம், விற்பனை, நிர்வாகம்)  பதவிகளுக்கு நபர்கள் வேண்டி நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தது.

அதில் குறிப்பிட்ட பதவிகளுக்குத் தேவையான படிப்பு, முன் அனுபவம் ஆகியவற்றோடு, “பிராமணர்கள் மட்டும்” (barahmins oly) என்று பெரும் எழுத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்நிறுவனத்தின் நடவடிக்கையை சமூகவலைதளத்தில் பலரும் கண்டித்துவருகிறார்கள்.  “குறிப்பிட்ட பதவிக்கு விண்ணப்பிப்பவர்களின் கல்வி, முன் அனுபவத்தை தனியார் நிறுவனம் குறிப்பிடுவது இயல்பே. ஆனால் குறிப்பிட்ட சாதியினர்தான் வேண்டும் என்பது என்ன நியாயம்” என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், “கோயில்களுக்குள் பிராமணர்கள் உள்ளிட்ட சில உயர்சாதியினர் மட்டுமே நுழைய முடியும் என்றும், கருவறைக்குள் பிராமரணர்கள் மட்டுமே நுழைந்து அர்ச்சனை செய்ய முடியும் என்றும் விதிகள் வகுக்கப்பட்டிருந்தன. ஆனால் முற்போக்காளர்கள் பலரது தொடர் போராட்டத்தால்  கோயில்களுக்குள் அனைத்து சாதியினரும் செல்லும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதே போல அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியும் என்பது  தமிழகத்தில் செயல் நிலைக்கு வரவில்லை என்றாலும் கேரளாவில் நடந்திருக்கிறது. இந்த நிலையில் அடுக்ககங்களில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே வீடு வாங்க முடியும் என்ற விளம்பரங்கள் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்கு எதிர்ப்புகள் எழுந்தவண்ணம்தான் இருக்கின்றன. இந்த நிலையில் வேலைக்கும் குறிப்பிட்டசாதியினர்தான் வேண்டும் என்று தனியார் நிறுவனங்கள் அறிப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று” என்றும் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் “rajeshkumar (முகமூடி)” என்கிற பெயரில் இயங்கும் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், குறிப்பிட்ட நிறுவனத்தின் அலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு இது குறித்து கேட்டதாகவும், அதற்கு அவர்கள் தங்களது  அலுவலகத்தில் எல்லாரும் வெஜிடேரியன்கள் என்பதால் வெஜிடேரியன்களாக எதிர்பார்ப்பாபதாக தெரிவித்ததாகவும் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், “ஏகோர்” நிறுனத்தை தொடர்புகொண்டு  patrikai.com இதழுக்காக பேசினோம்.

ஏகோர் நிர்வாகத்தின் தரப்பில் பேசியவர், “பிராமின்ஸ் ஒன்லி என்ற வாசகம் எழுத்துப்பிழையாக வந்துவிட்டது” என்றார்.

“உங்கள் விளம்பரத்தில் வேறு பல எழுத்துப்பிழைகள் இருக்கின்றன. ஆனால் பிராமினஸ் ஒன்லி என்பது எழுத்துப்பிழை இல்லாமல்தானே வந்திருக்கிறது.. தவிர முழுமையான இருவார்த்தைகள் தவறுதலாக வந்திருக்குமா” என்றோம்.

அதற்கு, “பிறகு பேசுங்கள்” என்று அலைபேசி தொடர்பை துண்டித்துவிட்டார்கள். மீண்டும் மீண்டும் அழைத்தபோதும் நமது அழைப்பை ஏற்கவில்லை.

இந்நிலையில் தொடர்ந்து பலரும் சமூகவலைதளங்களில் ஏகோர் நிறுவனத்துக்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்தபடி இருக்கிறார்கள். அந்நிறுவனம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Chennai accor, job opportunity Only Brahmins Private company Announcement Controversy  spelling mistake social media netizens, ஏகோர் சென்னை, பிராமணர்கள்  மட்டுமே வேலை  தனியார் நிறுவனம் சென்னை  ஸ்பெல்லிங் மிஸ்டேக்    அறிவிப்பு
-=-