புதுடெல்லி:

வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்ததால் தான், வேலை இழப்பும் அதிகரித்துள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற ‘ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட்’ பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்துகொண்டு பேசியதாவது;

உள்நாட்டு  சவால்களான விவசாயிகள் பிரச்சினை, வேலை வாய்ப்பு மறுப்பு, பிரிவினை சக்திகளின் ஆதிக்கம் ஆகியவை, வேலை இல்லா திண்டாட்டத்தை அதிகரித்து, வேலை இழப்பை அதிகரித்துள்ளன.

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை அரைகுறையாக நிறைவேற்றியதால், சிறு தொழில் மற்றும் அமைப்புசாரா தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு சவால்கள் சமுதாயத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

விவசாயிகள் தற்கொலையும் , அவர்கள் தொடர்ந்து போராடுவதும் நமது பொருளாதாரத்தில் சமமற்ற கட்டமைப்பு இருப்பதையே பிரதிபலிக்கிறது.

கம்பீரமாக அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் வெற்று அறிவிப்புகளாகவே உள்ளன. தரமற்ற திட்டங்களால் பொருளாதாரத்தின் நிலைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.