டிவிட்டர் நிர்வாக அதிகாரி மீது வழக்கு : ஜோத்பூர் நீதிமன்றம் அனுமதி

ஜோத்பூர்

டிவிட்டர் நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி மீது வழக்கு விசாரணைக்கு ஜோத்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பிரபல சமூக வலை தளமான டிவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணி புரிபவர் ஜாக் டோர்சி. இவர் சான்பிரான்சிஸ்கோவில் வசித்துவருகிறார். சுமார் 42 வயதான இவர் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது பல புகைப்படங்களை எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜாக் வெளியிட்ட புகைப்படங்களில் ஒன்றில் ஒரு பெண் “பார்ப்பனீய நாட்டுப் பற்றை நசுக்குவோம்” என எழுதி உள்ள பதாகையை வைத்திருப்பது போல் உள்ளது. இதற்கு பிராமணர்கள் பலரும் எத்ர்ப்பு தெரிவித்துள்ளனர். இது பிராமணர்களுக்கு எதிரான கருத்து என பலரும் எதிர்ப்பில் கூறி உள்ளனர். ஜாக் டோர்சியை எதிர்த்து விப்ரா அமைப்பின் இளைஞர் அணியை சேர்ந்த ராஜ்குமார் சர்மா ஒரு வழக்கு மனுவை ஜோத்பூர் நீதிமன்றாத்தில் பதிந்தார்.

இதற்கு டிவிட்டர் நிறுவனம் மன்னிப்பு கோரியது. அத்துடன் தங்களின் கருத்துக்கும் நிர்வாக அதிகாரியின் கருத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்தது. ஆயினும்  டோர்சியை மன்னிக்க முடியாது என சர்மா பதில் அளித்தார். அத்துடன் அவரே நேரடியாக மன்னிப்பு கேட்டாலும் அவர் செய்த குற்றம் இல்லை எனக் கூற முடியாது எனவும் தெரிவித்தார்.

இதை ஒட்டி இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள ஜோத்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அத்துடன் இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் முதல் தேதியில் இருந்து தொடங்க உள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.