வாஷிங்டன்:
கொரோனா பரவல் தடுப்பு முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவச உடைகளை வழங்க டிரம்ப் நிர்வாகம் தவறி விட்டதாக ஜோ பிடன் குற்றம்சாட்டி உள்ளார்.

அமெரிக்காவின் டெலாவரில் உள்ள போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மத்தியில் காணொலி மூலமாக பிரச்சாரம் மேற்கொண்ட, ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், டிரம்ப் மற்றும் அவரது மனைவி குறித்து தற்போது விமர்சிக்க விரும்பவில்லை என தெரிவித்தார்.

மேலும் அவர்கள் விரைந்து குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்த ஜோ பிடன், கொரோனா தொற்றால் தங்களது அன்பிற்கு உரியவர்களை இழந்தவர்களு​க்கு ஆறுதலை பகிர்ந்து கொண்டார். முன்களப் பணியில் ஈடுபட்டு, தங்கள் உயிரை போக்குவரத்து தொழிலாளர்கள் பலர் தியாகம் செய்ததையும் அவர் அப்போது சுட்டிக்காட்டினார். மேலும், முன்களப் பணியாளர்களுக்கு போதுமான கவச உடைகள் வழங்காதது தொடர்பாக டிரம்ப் நிர்வாகத்தை ஜோ பிடன் கடுமையாக சாடியுள்ளார். இதனை வழங்க வேண்டியது ஒரு அதிபரின் கடமை அல்லவா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா தொற்று பாதிப்புக்கு பின்னரும் பயணம் மேற்கொண்டது தொடர்பாக டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளார் ஜோ பிடன். ஒரு மாதத்திற்கும் மேலாக பிரச்சாரம் மேற்கொண்ட டிரம்ப், தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்குள் உள்ளாகவே நாட்கள் உள்ள நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்றும், இதற்கு அவர் முககவசம் அணியாதது ஒரு காரணம் என கூறப்படுகிறது.