அமெரிக்க ராணுவம் மீது ஜோ பைடன் பரபரப்பு குற்றச்சாட்டு

வாஷிங்டன்:
மெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தனது ஆட்சி அதிகார மாற்றத்துக்கு ராணுவம் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மாதம் 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தற்போதைய ஜனாதிபதி டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் டிரம்பை விட அதிகமான தேர்தல் சபை வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜனவரி மாதம் 20-ந்தேதி பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜனாதிபதி டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டினார்.

மேலும் ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

டிரம்பின் பிடிவாதத்தால் அதிகார மாற்றத்தை முன்னின்று செய்யும் ‘ஜெனரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன்’ (ஜி.எஸ்.ஏ.) என்ற அரசு அமைப்பு ஜோ பைடனின் வெற்றியை அறிவிப்பதில் காலம் தாழ்த்தி வந்தது. இதனால்ஜோபைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதில் சிக்கல் எழுந்தது. எனினும் நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த மாத இறுதியில், ஜோ பைடனுக்கு முறைப்படி ஆட்சி அதிகாரத்தை மாற்ற டிரம்ப் சம்மதம் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து ஜோ பைடனின் அதிகார பரிமாற்ற குழு ஆட்சி அதிகார மாற்றத்துக்கான பணிகளை தீவிரப்படுத்தியது.

இந்த நிலையில் பதவியேற்பு விழாவுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் அமெரிக்க ராணுவம் தனது ஆட்சி அதிகார மாற்றத்துக்கு முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

எனது அதிகார பரிமாற்ற குழு அரசியல் தலைமையிலிருந்து தடைகளை எதிர்கொண்டு வருகிறது. வெளி செல்லும் நிர்வாகத்திடம் இருந்து தேசிய பாதுகாப்பு துறையில் எங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் நாங்கள் பெறவில்லை.

இது ஒரு சிறிய விஷயம் அல்ல. என் பார்வையில் இது மிகவும் பொறுப்பற்ற தன்மையாகும்.

உலகெங்கிலும் உள்ள அமெரிக்க படைகள் குறித்த தெளிவான விவரங்கள் தேவை. ஏனெனில் அமெரிக்காவின் எதிரிகள் எந்தவொரு குழப்பத்தையும் பயன்படுத்தலாம். எனவே அமெரிக்க ராணுவம் எனது அதிகார பரிமாற்ற குழுவுடன் முழுமையாக ஒத்துழைத்து தேவையான அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் அமெரிக்க ராணுவம் மீதான ஜோ பைடனின் இந்த குற்றச்சாட்டை ராணுவ மந்திரி கிறிஸ்டோபர் மில்லர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஆட்சி அதிகார மாற்றத்துக்கு அமெரிக்க ராணுவம் முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “அமெரிக்க ராணுவம் இதுவரை 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுடன் 164 சந்திப்புகளை நடத்தி உள்ளது. மேலும் 5 ஆயிரம் பக்கங்களுக்கும் மேலான ஆவணங்களை வழங்கியுள்ளது. இது ஆரம்பத்தில் ஜோ பைடனின் அதிகார பரிமாற்ற குழு கோரியதை விட மிக அதிகம்” என கூறினார்.

மேலும் அவர் “அமெரிக்க ராணுவ அதிகாரிகள் அடுத்த வாரம் ஜோ பைடனின் அதிகார பரிமாற்ற குழுவுடன் 3 சந்திப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். அவற்றில் 2 கொரோனா வைரஸ் தொடர்பாகவும் ஒன்று சைபர் பாதுகாப்பு தொடர்பாகவும் நடைபெறும். இது தவிர மற்ற சந்திப்புகளை ஜனவரி மாத தொடக்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.