வாஷிங்டன்

மெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் இதுவரை 20 இந்திய வம்சாவளியினரை முக்கிய பதவிகளில் நியமனம் செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பை தோற்கடித்த ஜோ பைடன் வரும் 20 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார்.  அமெரிக்காவின் 46 ஆம் அதிபராகப் பதவி ஏற்க உள்ள அவருடன் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகக் கமலா ஹாரிஸ் பதவி ஏற்க உள்ளார்.  மேலும் இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது மட்டுமின்றி ஜோ பைடன் 20 இந்திய வம்சாவளியினருக்கு முக்கிய பதவிகள் அளித்துள்ளார்.  இந்த 20 பேரில் 17 பேருக்கு அமெரிக்காவின் சக்தி வாய்ந்த அலுவலகமான வெள்ளை மாளிகையில் முக்கிய பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன.  மேலும் இந்த 20 பேரில் 13 பேர் பெண்கள் ஆவார்கள்.  இவர்களில் நீரா தண்டன் என்பவர் வெள்ளை மாளிகை நிதிநிலை அலுவலக நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.  அமெரிக்கத் தலைமை மருத்துவ நிபுணராக விவேக் மூர்த்தி நியனமன் செய்யப்பட்டுள்ளார்.

இவர்களைத் தவிர நீதித்துறையில் இணை அட்டர்னியாக வனிதா குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  அமெரிக்காவின் முதல் பெண்மணியாக உள்ள ஜில் பைடனுக்கு கொள்கை இயக்குநராக மாலா அதிகா மற்றும் டிஜிடல் இயக்குநராக சர்பினா சிங்| ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  நியமனம் செய்யப்பட்ட 20 பேரில் ஆயிஷா ஷா மற்றும் சமீரா ஃபைசிலி ஆகிய இருவரும் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று அமெரிக்காவில் நடந்த இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட ஜோ பைடன், அப்போதே தமக்கு இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவிகள் தேவைப்படுவதால் தாம் அதிபர் ஆனல் இந்திய வம்சாவளியினருக்கு முக்கிய பதவிகள் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.  அதன்படி தற்போது தனது வாக்குறுதியை அவர் நிறைவேற்றி வருவதாக பைடன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.