வாஷிங்டன் :

வம்பர் 3-ம் தேதி, நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் படி ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடென் 264 பிரதிநிதிகளின் வாக்குகளை பெற்றுள்ளார்.

தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

 

இன்னும் நிவாடா, பென்சில்வேனியா, ஜார்ஜியா, வடக்கு கரோலினா மற்றும் அலாஸ்கா ஆகிய 5 மாகாண வாக்குகள் மட்டுமே அறிவிக்கப்பட வேண்டிய நிலையில், நிவாடா மாகாணத்தில் டிரம்பைக் காட்டிலும் ஜோ பிடென் 1 சதவீத வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் இருக்கிறார்.

இந்த மாகாணத்தில் மொத்தம் 6 வாக்குகள் உள்ளதால், இந்த 6 வாக்குகளை பெற்றாலே அடுத்த அதிபராக ஜோ பிடென் தேர்ந்தெடுக்கபடும் நிலையில் இருக்கிறார்.

அறுதிப்பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் பெற வேண்டிய நிலையில் ஜோ பிடெனுக்கு இன்னும் 6 வாக்குகளே தேவையான நிலையில் அவர் வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கிறது.

இது தவிர, பென்சில்வேனியா மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பிடென் முன்னிலை பெற்றிருக்கிறார், பென்சில்வேனியாவில் 20 வாக்குகளும் ஜார்ஜியாவில் 16 வாக்குகளும் உள்ளன.

இழுபறியில் உள்ள மற்ற இரண்டு மாகாணங்களான வடக்கு கரோலினாவில் 15 வாக்குகளும் மற்றும் அலாஸ்காவில் 3 வாக்குகளும் உள்ளன, இவ்விரு மாகாணங்களிலும் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிக வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

நிவாடா மாகாணத்தில் இன்னும் குறைந்த அளவு வாக்குகளே எண்ணப்பட வேண்டியுள்ளதால், ஜோ பிடென் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.