வாஷிங்டன்

புதிய அமெரிக்க அதிபராகப் பொறுப்பு ஏற்க உள்ள ஜோ பைடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா பாதிப்பில் சர்வ தேச அளவில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  இங்கு இதுவரை சுமார் 1.85 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3.26 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.    எனவே அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும்  பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.  சுமார் 78 வயதாகும் ஜோ பைடனுக்கு ஒரு செவிலியர் தடுப்பூசி போட்ட நிகழ்வு தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பாகக் காட்டப்பட்டுள்ளது.

துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பலர் அடுத்த வாரம் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.   உலக மக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்த நம்பிக்கையை வலுப்படுத்தி இது பாதுகாப்பானது எனத் தெரிவிக்கத் தாம் ஊசி போட்டுக் கொண்டதாக ஜோ பைடன் கூறி உள்ளார்.