அமெரிக்கவில் நிரந்தரக் குடியேற்றத்துக்கான தடை நீக்கம்! ஜோ பைடன் அதிரடி

வாஷிங்டன்: வெளிநாட்டவா்கள் அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறுவதற்கு முன்னாள் அதிபர் டிரம்ப் தடை விதித்திருந்த நிலையில், தற்போதைய புதிய அதிபர் ஜோ பைடன், அந்த தடையை முழுமையாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். இது உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா பரவலைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு (2020) அமெரிக்காவில், அப்போதைய அதிபர் டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்படி நாட்டின் பொருளாதார பாதிப்பை சரி செய்யும் வகையில்,  அமெரிக்கர்களின் வேலையை உறுதி செய்யும் வகையில், வெளிநாட்டைச் சோந்தவா்களுக்கு, அமெரிக்கா வில்  நிரந்தரக் குடியுரிமை வழங்குவதற்கு தடை விதித்தார். அதுபோல எச்பி1 விசாவுக்கும் தற்காலிக தடை போட்டார். இதனால், இந்திய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்கள் அமெரிக்க குடியுரிமை பெற முடியாத நிலை உருவானது.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்பின் நிர்வாகத்தை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடன், தேர்தல் பிரசாரத்தின்போது  குடியேற்றத் தடை நீக்கப்படும் என உறுதி அளித்தார். அதன்படி தேர்தலில் வெற்றிபெற்று அதிபராக பதவி ஏற்ற ஜோ பைடன் தொடர்ந்து, டிரம்பின் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை ரத்து  செய்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது, அமெரிக்காவில் வெளிநாட்டினர்  நிரந்தரக் குடியேற்றத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ஜோ பைடன் நிா்வாகம் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடா்பாக வெள்ளை மாளிகை வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘டொனால்ட் டிரம்ப் நிா்வாகத்தின் முடிவு, அமெரிக்கா்களின் நலனைக் காக்கவில்லை. மாறாக, அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையிலேயே அந்த முடிவு இருந்தது. அதன் காரணமாக, பல வெளிநாட்டினா் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாத சூழல் நிலவியது. அதனால், சில அமெரிக்கா்கள் தங்கள் குடும்பத்தினரைக்கூட சந்திக்க முடியாமல் போனது. அமெரிக்காவின் தொழில் நிறுவனங்களும் அந்த முடிவால் கடும் பாதிப்பைச் சந்தித்தன. வெளிநாட்டு இளைஞா்கள் பலரின் கனவுகளை டிரம்ப் நிா்வாகத்தின் முடிவு சிதறடித்தது’ , அவை தற்போது ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.