வாஷிங்டன்

நாளை அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்க உள்ள ஜோ பைடன் அதிக வயதான அதிபர் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார்.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டொனால்ட் டிரம்ப் தோல்வி அடைந்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.  நாளை ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார்.  இதற்காக மிகத் தீவிரமாக ஏற்பாடுகள் நடந்து  வருகின்றன.  அவர் தேர்தலில் வெற்றி பெற்றும் டொனால்ட் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் மிகவும் இழுத்தடித்து தற்போது வேறு வழியில்லாமல் ஒதுங்கி உள்ளார்.

தற்போது பதவி ஏற்க உள்ள ஜோ பைடனுக்கு நவம்பர் மாதம் 78 வயதை எட்டி உள்ளார்.  இதனால் அவர் மிகவும் வயதான அதிபர் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார்.  இதற்கு முன்பு டொனால்ட் டிரம்ப் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரியில் டிரம்ப் பதவி ஏற்ற போது அவருக்கு 70 வயதாகி இருந்தது.   இதற்கு முன்பு ரொனால்ட் ரீகன் 1981 ஆம் ஆண்டில் பதவி ஏற்றபோது அவருக்கு 69 வயதானது.  அவர் மீண்டும் அதிபரான போது அவருக்கு 77 வயதாகி இருந்தது.

இதைப் போல் கடந்த 1961 ஆம் ஆண்டு ஜான் எஃப் கென்னடி பதவி ஏற்ற போது அவருக்கு 43 வயதானதால் அவர் வயது குறைந்த அதிபர் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார்.  இதற்கு அடுத்தபடியாக 1869 ஆம் ஆண்டு அதிபரான யூலிசஸ் கிராண்ட் 46 வயதில் அதிபரானார்.  கடந்த 1993 ஆம் ஆண்டு பில் கிளிண்டன் முதல் முறையாகப் பதவி ஏற்றபோது அவருக்கு வயது 46 ஆகி இருந்தது.  பாரக் ஒபாமா 2009ல் பதவி ஏற்ற போது அவருடைய வயது 47 ஆகும்.