வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக இன்று பதவி ஏற்கும் ஜோ பைடன், முஸ்லிம்கள் குடியேற்ற தடை, மெக்சிகோ சுவர் கட்டுமானம் உள்பட டிரம்பின் பல மக்கள் விரோத  அறிவிப்புகளுக்கு பதவி ஏற்றதும் தடை விதித்து, முதலில் கையெழுத்திடுவார் என அவரது உதவியாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப், பதவி ஏற்றதும், அமெரிக்காவில் இஸ்லாமியர்கள் குடியேற தடை விதித்ததுடன், இரான், லிபியா, சிரியா, ஏமன், சோமாலியா, சாட், வடகொரியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள்  வரவும் தடை விதித்தார். மேலும், மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில்  பிரமாண்ட சுவர் கட்ட உத்தரவிட்டார். மேலும் விசா எச்1பி விசா நடவடிக்கை, கொரோனா தொற்று பரவலில் மெத்தனம் உள்பட பல்வேறு நடவடிக்கைகளால் அமெரிக்கா கடும் எதிர்ப்பை சந்தித்து வந்தது.

இந்த நிலையில், இன்று பதவி ஏற்கும் ஜோ பைடன், டிரம்பின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாகவும், பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அவரது உதவியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இன்று பைடன் பதவி ஏற்றதும் முதலாவதாக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் கொள்கைகளில் இருந்து விலகி முஸ்லிம்கள் குடியேற்ற தடை நீக்கம், மெக்சிகோ சுவர் கட்டுமானத்துக்கு தடை,  முக்கவசம் அணிவது, உள்பட  டிரம்பால் அகற்றப்பட்ட பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் மற்றும் உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்காவை மீட்டெடுப்பதற்கான முயற்சி, மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் புதிய பாதைகளை அமைப்பதற்காக அமெரிக்கத் தலைவராக பதவியேற்ற சில மணிநேரங்களில் பிடென் கையெழுத்திடுவார் என்று அவரது உதவியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும்,  குடியேற்றக் கொள்கைகளை மறுசீரமைக்க காங்கிரசுக்கு ஒரு மசோதாவை அனுப்பவும், நாட்டில் வாழும் மில்லியன் கணக்கான ஆவணமற்ற புலம் பெயர்ந்தோருக்கு டிரம்ப் நிர்வாகம் மறுத்த குடியுரிமைக்கான புதிய  பாதையை வழங்கவும் ஜோ பைடன் திட்டமிட்டு உள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார், டிரம்ப் நிர்வாகத்தின் மிகப்பெரிய சேதங்களை மாற்றியமைக்க மட்டுமல்லாமல் – நம் நாட்டை முன்னோக்கி நகர்த்தவும் தொடங்குவார்” என்று  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.