மும்பை

கேரள மாநிலம் இன்னும் மோடி மயமாகவில்லை எனப் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கேரள மாநிலத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.  காங்கிரஸ் கட்சிக் கூட்டணி போட்டியிட்ட 20 தொகுதிகளில் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது.    நாடெங்கும் மோடி அலை வீசுவதாகக் கூறப்பட்ட போதிலும் தென் இந்தியாவில் அந்த வெற்றி கிடைக்காமலே இருந்தது.   இது அனைவரையும் ஓரளவு வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகரான ஜான் ஆபிரகாம் கேரளாவைச் சேர்ந்தவர் ஆவார்.  அவர் மும்பையில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டார்.   வழக்கமாக அரசியல் குறித்து அதிகம் பேசாத ஜான் ஆபிரகாம் இந்த விழாவில் கேரள அரசியல் குறித்துப் பேசியது பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

ஜான் ஆபிரகாம், “எனது சொந்த மாநிலமான கேரளா மிகவும் அழகிய மாநிலமாகும்.   அந்த மாநிலத்துக்கு மேலும் அழகு சேர்ப்பது 10 மீட்டர் இடைவெளியில் ஒரு கோவில், ஒரு தேவாலயம்  மற்றும் ஒரு மசூதி உள்ளதே ஆகும்.  ஆயினும் இப்பகுதி எவ்வித குழப்பமும் இன்றி நல்ல அமைதியுடன் உள்ளது.   மதக் கலவரங்களை இம்மாநிலம் கண்டதே இல்லை.

அடுத்ததாக பிடல் காஸ்டிரோ மறைந்த போது நான் கேரளா சென்றிருந்தேன்.  இந்தியாவில் அவர் மறைவுக்காகச் சுவரொட்டிகளும் பான்ர்களும் வைத்து இரங்கல் தெரிவித்தது கேரள மாநிலத்தில் மட்டுமே ஆகும்.   உண்மையான கம்யூனிச பாதையில் கேரளா நடைபோடுகிறது.  என் தந்தை எனக்குப் பல மார்க்சிய புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொல்லி இருக்கிறார்.

மலையாளிகளைப் பொறுத்தவரைக் கம்யூனிசம் அவர்கள் ரத்தத்தில் ஊறி உள்ளது.  நாங்கல் சமமான வாழ்வு, சமமான செல்வப் பங்கீடு ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.  இதனால்தான் கேரள மாநிலம் மோடி மயமாகாமல் உள்ளது என நான் நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.