ஜான்சன் அண்ட் ஜான்சன் : தவறான இடுப்பு மூட்டு  இழப்பீடு அளிப்பதில் மேலும் தாமதம்

டில்லி

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தவறான இடுப்பு மூட்டு அளிக்கப்பட்டவருக்காக இழப்பீடு அளிப்பது மேலும் தாமதமாகும் என தகவல்கள் கூறுகின்றன.

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் இடுப்பு மூட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான செயற்கை உறுப்பை தயாரித்து வழங்கி வந்தது.  கடந்த 2010 ஆம் வருடம் இந்த உறுப்பு தயாரிப்பில் ஏற்பட்ட தவறால் உலகெங்கும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.  அவ்வாறு சுமார் 8000 பேர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டனர்.   அவர்களுக்கு நிறுவனம் 2500 கோடி டாலர்கள் இழப்பீடு வழங்க ஒப்புக் கொண்டது.

இந்தியாவில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் இது வரை 250 பேர் மட்டுமே புகார் அளித்துள்ளனர்.   ஆனால் அந்த வருடம் ஆயிரக்கணக்கில் அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன.   அதனால் அரசு அவர்களை உடனடியாக இழப்பீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு கோரியது.    எனினும்  போதிய விண்ணப்பங்கள் வராததால் இழப்பீட்டு தொகை நிர்ணயம் செய்ய பல நாட்கள் ஆகியது.

இறுதியாக சென்ற மாதம் ரூ. 30 லட்சத்தில் இருந்து ரூ.1.23 கோடி வரை நோயாளிகளின் பாதிப்புக்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய அரசு உத்தரவிட்டது.   அத்துடன் இந்த இழப்பீட்டை பெற உடனடியாக விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும் எனவும் அரசு கோரிக்கை விடுத்தது.    ஆனால் இழப்பீட்டு தொகை மிகவும் குறைவாக உள்ளதாக நோயாளிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அத்துடன் இவ்வாறு பாதிக்கப்ப்பட்டவர்களில் பலர் ஏற்கனவே மரணம் அடைந்துள்ளனர்.   அவர்களுடைய பாதிப்பை கணக்கிட முடியாது எனவும் நோயாளிகளின் உறவினர்கள் தெரிவித்தனர்.    இந்த கணக்கீட்டை ஒப்புக் கொள்ள முடியாது எனவும் புதிய கணக்கீடு செய்யப்படும் வரை இழப்பீட்டை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் அவர்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்ச்ர் நத்தாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

அத்துடன் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அரசு கணக்கு செய்த இழப்பிட்டு தொகையை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.     இந்திய மருத்துவச் சட்டப்படி கணக்கீடு செய்யப்படவில்லை எனவும் இந்த கணக்கீடு எவ்வாறு செய்யப்பட்டது என்பதில் வெளிப்படை தன்மை இல்லை எனவும் அந்த வழக்கில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே நோயாளிகளின் புகார் மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மத்திய சுகாதார அமைச்சகம் இது குறித்து ஆராய ஒரு குழுவை அமைத்துள்ளது.   இதனால் இழப்பீடு கிடைப்பதில் மேலும் தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது.