பாஜகவுக்கு எதிராக கை கோர்ப்போம்: மாநிலக் கட்சிகளுக்கு மம்தா அறைகூவல்!

Join Hands, Says Mamata Banerjee To Regional Parties

 

பாரதிய ஜனதாவுக்கு எதிராக மாநிலக் கட்சிகள் கை கோர்க்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

பாரதிய ஜனதா வடக்கே கால் பதிக்க முடியாத மிகச் சில மாநிலங்களில் மேற்குவங்கமும் ஒன்று. இடதுசாரி அரசியலில் 30 கால்நூற்றாண்டுகளுக்கும் மேலாக திளைத்திருந்த அந்த மாநிலத்தை, மம்தா பாணர்ஜி கடந்த சில ஆண்டுகளாக தன்வசப்படுத்தி உள்ளார். மோடிக்கு எதிராக பகிரங்கமான சவால்களையும் அவர் விடுத்து வருகிறார்.

இந்நிலையில், ஒடிசா முதலமைச்சர் நவீன்பட்நாயக்கை நேற்று சந்தித்தார். அப்போது இருவரும் அரசியல் பேசவில்லை என்று மறுத்தாலும், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பாணர்ஜி கூறிய கருத்துகளில் அவரது அழுத்தமான அரசியல் நிலைப்பாடுகள் தொனித்தன.

இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பைக் காப்பாற்ற வேண்டும் என்றால், பிராந்தியக் கட்சிகள் பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஒன்று சேர வேண்டும் என்று கூறினார். தமது கட்சி எம்பிக்கள் பலரை மத்திய பாஜக அரசு சிறையில் தள்ளி இருப்பதாகவும் அப்போது ஆவேசப்பட்டார்.

ஒடிசாவில் உள்ள பூரி ஜகநாதர் கோவிலுக்கு சென்றிருந்த மம்தாவுக்கு எதிராக ஆர்எஸ்எஸ், பாஜக பரிவாரத்தினர் பலரும் முழக்கம் எழுப்பினர். மாட்டுக்கறிக்கு தடைவிதிக்க மம்தா மறுப்பதாக அவர்கள் அப்போது குற்றம்சாட்டினர். அதுகுறித்து கருத்துத் தெரிவித்த மம்தா, ‘பாரதிய ஜனதாவினர் தம்மைப் பற்றி மிகவும் கீழ்த்தரமாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருவதாக கூறினார். நான் மாட்டுக்கறி உட்கொள்வதாக அவர்கள் விமர்சிக்கின்றனர். நான் என்ன சாப்பிட வேண்டும் என்பது எனது விருப்பம். இதை தீர்மானிக்க இவர்கள் யார்?.அவர்கள் வேலை என்னவோ அதை பார்க்கட்டும்’ என வெடித்தார்.

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேற்றுச் சந்தித்திருக்கும் நிலையில், மம்தா பாணர்ஜியும் பாரதிய ஜனதா மற்றும் மோடிக்கு எதிரான தமது குரலை மீண்டும் உரத்து ஒலித்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாகவே பார்க்கப்படுகிறது. விரைவில் நடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில், பாரதிய ஜனதா நிறுத்தும் வேட்பாளருக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான முயற்சியில், நிதிஷ்குமார், மம்தா பாணர்ஜி போன்ற தலைவர்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.