டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஊடக செய்தியாளர்மீது இந்துத்துவா அமைப்பினர் தாக்குதல்

டெல்லி:

டெல்லியில் 3வது நாளாக கலவரம் நீடித்து வரும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஊடக செய்தியாளர்மீது இந்துத்துவா அமைப்பினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு செய்தியாளர்கள் சங்கம் மற்றும் ஊடகத்துறையினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

தலைநகர் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இதில் 7 பேர் பலியான நிலையில், ஏராளமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர், இன்று 3வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், டெல்லி போராட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த பத்திரிகையாளர் அரவிந்த் குணசேகர். டெல்லியில் நடந்த வன்முறையில் தாக்கபட்டுள்ளார். இவர்  பிரபல தொலைக்காட்சி ஊடகமான என்டிடிவியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். வன்முறை சம்பவத்தின்போது, அந்த பகுதிக்கு செய்தி சேகரிக்க சென்ற அவர்மீது இந்துத்துவ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்த தாக்குதலின்போது,  தான் ஒரு இந்து என்று கூறியதைத் தொடர்ந்து, அந்த கும்பல் தாக்குதலை நிறுத்தியுள்ளார். இந்த தாக்குதலில் அரவிந்தின் பல் உடைந்து முகத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபோல நேற்று டைம்ஸ்ஆப் இந்தியா செய்தியாளர்மீதும் வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்துத்துவா அமைப்பினரின்  வன்முறை செயலுக்கு நாடு முழுவதும் உள்ள ஊடக அமைப்புகளும், செய்தியாளர்கள் சங்கங்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளமும் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறது…