பிடிபட்ட ரவுடிகளிடம் பத்திரிகையாளர் அட்டை! கல்லூரி மாணவர்களும் கைது!

சென்னை:

நேற்று சென்னை அருகே சுமார் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள்  கூண்டோடு துப்பாகி முனையில் கைது செய்யப்பட்டனர். இந்த  ரவுடி கும்பல்களில் கல்லூரி மாணவர்களும் இருந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பல ரவுடிகள் பத்திரிகையாளர் என்ற அடையாளத்தில் சுற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் ரவுடி பினு. இவருடைய பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட எண்ணிய சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ரவுடிகள்,  நேற்று முன்தினம் இரவு  பூந்தமல்லி அருகே மலையம்பாக்கத்தில்  உள்ள லாரி ஷெட் ஒன்றில் பிறந்த நாள் விழாவை கொண்டாட ஏற்பாடு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு  ரவுடி பினுவின் பிறந்தநாள் கொண்டாப்பட்டது. இந்த விழாவில் சுமார் 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. பிறந்த நாளின்போது, ரவுடி  பினு கேக்கை வீச்சரிவாளால் வெட்டி, தடபுடலாக  கொண்டாடினார். அவருக்கு ஆளுயர ரோஜா மாலை சூட்டியும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் கொண்டாட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து ரகசிய தகவல்கள் கிடைத்த போலீசார், ரவுடிகளை கூண்டோடு பிடிக்க எண்ணினர். அதன் காரண மாக, ரவுடிகள் கொண்டாட்டத்தில் இருந்தபோது, துப்பாக்கி சகிதம் அந்த இடத்தை சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையில் சுமார் 76 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். பிரபல ரவுடி  பினு உள்பட பலர் தப்பி ஓடினர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில், பிடிபட்ட ரவுடிகளிடம் நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ரவுடிகளில் பலர் இளைஞர்களாகவும், கல்லூரி மாணவர்களாகவும் இருந்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் பலரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்களில் பிரஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட 76 ரவுடிகளில் 13 பேரிடம் போலி பத்திரிகையாளர் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது போலீசாருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விருந்தில் சில வழக்கறிஞர்கள், போலி பத்திரிகையாளர்களும் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ரவுடிகள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் தப்பி ஓடிய கைதிகளை சுட்டுப்பிடிக்க போலீசாருக்கு மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

You may have missed